பிரித்தானியாவில் தாயாரை காப்பாற்ற முயன்று கத்திக்குத்துக்கு பலியான சிறுவன்: வெளியான முதல் புகைப்படம்
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் தாயாரை காப்பாற்ற முயன்று, கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட சிறுவனின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மிகக் கொடூரமான தாக்குதல் என பொலிசார் குறிப்பிட்ட குறித்த சம்பவத்தில் சிறுவனின் தாயார் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
15 வயதேயான Jakub Szymanski ஒரு ஹீரோ என்றே உறவினர்களால் கொண்டாடப்படுகிறார். தமது தாயார் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்று பரிதாபமாக பலியாகியுள்ளார்.
தொடர்புடைய சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த தாயார் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும், தமது மகனின் இறப்பில் கடும் மன வேதனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 44 வயது கடந்த நபரை இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடிபட்ட சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் தாயாருக்கும் தொடர்பிருக்கலாம் எனவும், இது குடும்ப வழக்காக இருக்கவே வாய்ப்பு எனவும் பொலிசார் நம்புகின்றனர்.
வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 9.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தாயாரை காப்பாற்ற முயன்ற நிலையிலேயே சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.