பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்: இன்று எப்படி இருக்கிறான் தெரியுமா?
பிரான்ஸ் நாட்டுச் சிறுவன் ஒருவன் தனக்கு ஆறு வயது இருக்கும்போது, லண்டனிலுள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து தூக்கிவீசப்பட்டான்.
100 அடி உயரத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட ஆறு வயது சிறுவன்
2019ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், லண்டனிலுள்ள Tate Modern art gallery என்னும் அருங்காட்சியகத்தின் பத்தாவது மாடியிலிருந்து Jonty Bravery என்னும் ஆட்டிஸக் குறைபாடு கொண்ட ஒருவர், அந்த ஆறு வயது சிறுவனைத் தூக்கிக் கீழே வீசினார்.
யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கில் Jonty Bravery அப்படிச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Jonty Bravery மீது கொலை முயற்சிக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தற்போது சிறையிலிருக்கிறார்.
தூக்கிவீசப்பட்ட குழந்தையின் நிலை
Jonty Braveryயால் தூக்கிவீசப்பட்ட குழந்தை உயிர் பிழைத்துக்கொண்டான். ஆனால், அவன் உடல் முழுவதும் எக்கச்சக்க பிரச்சினைகள்.
மூளையில் இரத்தக்கசிவு முதல் உடல் முழுவதும் எலும்பு முறிவு என கடுமையாக பாதிக்கப்பட்டான் அந்த பிரான்ஸ் நாட்டுச் சிறுவன்.
தொடர் சிகிச்சையிலிருக்கும் அந்தச் சிறுவன், தன் உடல் பாகங்களை பயன்படுத்தும் சிகிச்சைகளின் ஒரு பகுதியாக, இப்போது ஜூடோ, நீச்சல் பயிற்சி ஆகியவை கற்றுக்கொள்கிறானாம்.
அத்துடன் விளையாட்டை அதிகம் விரும்பும் அந்தச் சிறுவன், சிறப்பு வில் வித்தையும் கற்றுக்கொள்கிறானாம்.
மூச்சு விடுவதில் சிரமம் அனுபவித்த அவன், இப்போது சுவாசிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பேச்சுப் பயிற்சி எடுப்பதாகவும், உணவை விழுங்குதல், மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தல் ஆகிய விடயங்களையும் தானே செய்வதாகவும் கூறி மகிழ்கிறார்கள் அவனது பெற்றோர்.
உண்மை நிலவரம் என்னவென்றால், ஒரு சாதாரண சிறுவன் தானாகவே செய்யக்கூடிய எல்லா விடயங்களையும் இப்போது நிபுணர்களின் உதவியுடன் கற்று வருகிறான் அவன். ஆனாலும், தனது சட்டையை டக் இன் செய்வது, சாப்பிடும்போது இறைச்சியை துண்டாக்குவது, குளிப்பது ஆகிய அன்றாட விடயங்களில் இன்னமும் அவனுக்கு தன் பெற்றோரின் உதவி தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.