இரட்டை குழல் துப்பாக்கியால் நண்பரின் முகத்தை பதம் பார்த்த இளைஞர்: வெளியான பரபரப்பு தீர்ப்பு
பிரித்தானியாவில் இரட்டை குழல் துப்பாக்கியால் 15 வயது சிறுவனின் முகத்தை பதம் பார்த்த இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 15 வயது சிறுவன் இப்ஸ்விச் அருகே கேஸ்கிரேவில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போதே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
2020 செப்டம்பர் 7ம் திகதி நடந்த இந்த விவகாரம் தொடர்பில், விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறைவாசம் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மட்டுமின்றி, இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் புகைப்படத்தை வெளியிடவும் நீதிபதி அனுமதியளித்துள்ளார். கொரோனா பரவல் தொடர்பில் அமுலில் இருந்த தேசிய ஊரடங்கு நீக்கப்பட்டு, செப்டம்பர் 7ம் திகதி தொடர்புடைய மாணவர் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இரட்டை குழல் துப்பாக்கியுடன் மறைவாக இருந்த Jacob Talbot-Lummis, சுமார் 1.5 மீற்றர் தொலைவில் வைத்து தமது பால்யகால நண்பனை சுட்டுள்ளான். இதில் துப்பாக்கி குண்டு முகத்தை பதம் பார்க்க, தற்போது ஆயுளுக்கும் ஆறாத வடுக்களுடன் உள்ளார் அந்த 15 வயது சிறுவன்.
இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள Jacob Talbot-Lummis இனி தமது 40-வது வயதிலேயே சிறையில் இருந்து வெளிவர முடியும். Jacob Talbot-Lummis தங்களது இரட்டை குழல் துப்பாக்கியால் குறித்த சிறுவனை பலமுறை மிரட்டியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.