பிரான்ஸ் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரான்சில் வேலைநிறுத்தங்கள் காரணமாக, பயணிகள் பெரும் இடையூறுகளை சந்திக்க உள்ளார்கள்.
வேலைநிறுத்தங்களால் இடையூறுகள்
2024ஆம் ஆண்டு, பிரான்சில் வேலைநிறுத்தங்கள் இல்லாமல், நாடு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது, ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பரில் அந்த நிலை மாற உள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பிரான்சின் பல பெரிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், குளிர்காலம், வேலைநிறுத்த சீஸனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சின் நான்கு முக்கிய ரயில்வே தொழிற்சங்கங்களும், நவம்பர் 21 வியாழன் அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்காக ஒன்றாக கைகோர்த்துள்ளன.
இந்த கூட்டு வேலைநிறுத்த நாள், குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது கிறிஸ்துமஸ் விடுமுறைகள் மற்றும் அதற்கு அப்பாலும் கூட நீட்டிக்கப்படலாம்.
தொழிற்சங்கங்கள், பிரான்ஸ் அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், டிசம்பர் 11 முதல் நீண்ட மற்றும் வலுவான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இந்த வார துவக்கத்தில் தெரிவித்தன.
எதற்காக வேலைநிறுத்தங்கள்?
பிரான்ஸ் அரசு இரயில் நிறுவனமான SNCF, உள்ளூர் ரயில் அமைப்பான TER, பயணிகள் ரயில் நிறுவனமான Transilien மற்றும் Intercité ஆகியவற்றில் தனியார்மயமாக்கல் குறித்து தொழிற்சங்கங்கள் கவலை கொண்டுள்ளன.
ஆகவேதான், ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு திட்டமிட்டுவருகின்றன.
விடயம் என்னவென்றால், சில விமான பைலட்களும் இன்று, அதாவது, நவம்பர் 14ஆம் திகதி வேலைநிறுத்தம் செய்திருப்பதால், விமான சேவைகளிலும் சில தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |