பிரச்சனைகளை சந்திக்க போகும் ரோகித் சர்மா - எச்சரிக்கை விடுக்கும் முன்னாள் வீரர்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இனி வரும் காலங்கள் சோதனையாக அமையும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக் கூறியுள்ளார்.
கடந்த 7 வருடங்களாக இந்தியாவை நம்பர் ஒன் அணியாக மிக சிறப்பாக வழிநடத்தி வந்த விராட் கோலி கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்குப் பின் அடுத்த 2 மாதங்களுக்குள் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்,இலங்கை அணிக்கு எதிரான தொடர்களை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இதனால் ரோகித் சர்மாவை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் இன்றளவும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக விராட் கோலியைவிட ரோகித் சர்மா மிக சிறந்த கேப்டனாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக் இனிமேல் தான் பிரச்சனை இருக்கும் என எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பிராட் ஹாக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு கேப்டனாக ரோகித் சர்மா சவாலான தொடர்களை இனி தான் எதிர்கொள்ள உள்ளார் என்றும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற பலமான அணிகளுடன் மோதவுள்ளது ரோகித்துக்கு சவாலாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இத்தகைய போட்டிகளில் ரோகித் சர்மா கூலாக இருக்கிறாரா அல்லது ஆக்ரோஷமாக மாறுகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ஹாக் தெரிவித்துள்ளார்.