ஒரே விபத்தில் தங்கையையும் பிள்ளைகளையும் பறிகொடுத்த கனேடிய பெண்ணின் நிலை
ஒரே விபத்தில் தன் தங்கையையும் அவரது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த ஒரு பெண், தான் இன்னமும் அந்த இழப்பை தாங்க இயலாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிராம்ப்டன் நீதிமன்றம் ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) தன் தங்கை மற்றும் அவரது பிள்ளைகளின் இழப்பு தன் மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை விம்மலுடனும், விசும்பலுடனும் கண்ணீர் மல்க விவரித்தார் Anna Martin.
2020 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 18ஆம் திகதி, Anna Martinஉடைய தங்கையான Karolina Ciasulloவும், அவரது மகள்களான Klara (6), Lilianna (3) மற்றும் Mila (1) ஆகியோரும் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த மற்றொரு கார் அவர்களுடைய கார் மீது மோதியதில், Klara சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, Karolinaவும் மற்ற இரண்டு பிள்ளைகளும் மருத்துவமனையில் உயிரிழந்தார்கள்.
இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த Karolinaவின் அக்கா Anna, பெற்றோர் Lilianna மற்றும் Kazimierz Lugiewicz, Karolinaவின் உயிர்த்தோழியான Agata Bonsu ஆகியோர் Karolinaவின் மரணம் கடந்த 18 மாதங்களாக தங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விவரித்தார்கள்.
அப்போதுதான், சில நேரங்களில் தன் அன்புத் தங்கையையும் பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் இழந்ததால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தின் காரணமாக, தான் அவ்வப்போது சுயநினைவு இழந்துவிடுவதாக தெரிவித்தார் Anna.
தானும் தன் தங்கையும் ஒரு நாளுக்கு 10 முறையாவது தொலைபேசியில் பேசிக்கொள்வதுண்டு என்று கூறும் Anna, அன்று தன் தங்கை உயிரிழப்பதற்கு முன்பு கூட தான் அவரிடம் பேசியதாகவும், விபத்து குறித்து அறிந்து மருத்துவமனைக்குச் செல்வதற்காக தங்கள் காரில் ஏற பயந்ததாகவும், காரில் ஏறியதும், தன் பிள்ளைகள், நாங்கள் சாக விரும்பவில்லை அம்மா, எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று கூறி அழுததாகவும், தங்கையையும் பிள்ளைகளையும் எப்படியாவது பார்க்கவேண்டுமே என்பதற்காக பயத்தோடு காரை ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
Karolinaவின் 25 ஆண்டுகால நெருங்கிய தோழியான Agata Bonsu, தானும் தன் பிள்ளைகளும் பல ஆண்டுகளாக, பிறந்தநாட்கள் உட்பட பல விடயங்களை சேர்ந்தே கொண்டாடியதாகவும், சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த தன் தோழியையும் பிள்ளைகளையும் பார்த்து, அவர்களுக்கு விடை கொடுத்தும், அவர்கள் எழுந்து வந்துவிட மாட்டார்களா என்று தான் ஏங்கிக்கொண்டிருந்ததாகவும், தன் பிள்ளைகளோ தங்கள் நண்பர்களுக்கு என்ன ஆனது என புரியாமல் தவித்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Karolinaவின் பெற்றோரோ, எங்கள் வாழ்வே வெறுமையாகிப்போனது, எங்கள் உலகம் முடிந்துபோனது, எங்கள் துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்கிறார்கள்.
இப்போதும், என்ன சத்தம் கேட்டாலும் தங்கள் பிள்ளைகள் வந்துவிட்டார்களா என்று எண்ணி எட்டிப் பார்ப்பதும், அவர்கள் வரமாட்டார்களே, அவர்கள் உயிருடன் இல்லையே என்ற நிஜ உலகத்துக்கு வருவதுமாகவும், ஆனாலும் அவர்கள் வருவார்களா என வீட்டு வாசலையே தாங்கள் இருவரும் எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் Karolinaவின் பெற்றோர்.
Karolinaவின் கார் மீது மோதிய மற்றொரு காரை ஓட்டிய ஒன்ராறியோவைச் சேர்ந்த Brady Robertson என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியது முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.