ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது!
துஷ்பிரயோகம் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
பிரஜ்வல் ரேவண்ணா கைது
ஜேர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
பின்னர், நேற்று (மே 30) ஜேர்மனியில் இருந்து கிளம்பிய நிலையில் நள்ளிரவு பெங்களூரு வந்தடைந்த பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்தில் சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
என்ன விவகாரம்?
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் போட்டியிட்டார்.
அங்கு, கடந்த 26 -ம் திகதி தேர்தல் நடந்த நிலையில், அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகின.
அதோடு, வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் கொடுத்த புகாரின் படி பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 துஷ்பிரயோகம் வழக்குகள் பதியப்பட்டன.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 26-ம் திகதி ஜேர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் சிறப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் பிறப்பித்தனர்.
அதோடு, அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர். பின்னர், அவரை உடனடியாக நாடு திரும்புமாறு கூறினர்.
இதையடுத்து, தான் மே 31-ம் திகதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் முன்னிலையில் நேரில் ஆஜராவதாகவும், வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் எனவும் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |