கனடாவில் பெற்றோரின் அனுமதியின்றி வழக்கத்துக்கு மாறான முறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: நீதி கோரும் பெற்றோர்
கனடாவில், பெற்றோரின் அனுமதியின்றி வித்தியாசமான முறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தை ஒன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஒன்ராறியோவைச் சேர்ந்த மணீஷ், ஸ்வாதி பட்டேல் தம்பதியருக்கு 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆனால், ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்த மகிழ்ச்சி அந்த பெற்றோருக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆம், ஆனந்த் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை, இரண்டே நாட்களில் உயிரிழந்துவிட்டான்.
சுருக்கமாக, குழந்தை இறந்துவிட்டது என்று இந்த சம்பவத்தைக் கூறி முடித்துவிடமுடியாது. காரணம், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் மரணத்தின் பின்னணியில் பல்வேறு தவறுகல் நிகழ்ந்துள்ளன.
கர்ப்ப காலத்தில், ஸ்வாதியும், அவரது கர்ப்பத்திலிருந்த குழந்தையும் ஆரோக்கியமாக இருந்த நிலையில், Brampton Civic Hospital என்ற மருத்துவமனையில் நிகழ்ந்த பிரசவத்தின்போது ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது போலும். ஆகவே, மருத்துவர்கள் பிரசவத்துக்கு vacuum-assisted delivery என்ற முறையில் பிரசவம் பார்த்துள்ளார்கள். புரியும்படி கூறவேண்டுமானால், நண்பன் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் குழந்தைக்கு பிரசவம் பார்ப்பாரே அதுபோன்ற, ஆனால், மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு நடைமுறை அது.
குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து எடுக்கும்போது குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், குழந்தையின் பெற்றோரின் அனுமதியின்றி இந்த vacuum முறையில் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். அப்போது குழந்தையின் தலையிலிருந்து ஏராளமான இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஆனால், அது தாயின் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறிய இரத்தம் என்று நினைத்து மருத்துவர்கள் விட்டுவிட்டிருக்கிறார்கள்.
குழந்தைக்கு ஏதோ பிரச்சினை என்பது புரிந்ததும், ரொரன்றோவிலுள்ள Sick Kids hospital என்ற சிறப்பு மருத்துவமனைக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரும் வரை குழந்தை முறைப்படி கவனித்துக்கொள்ளப்படவில்லையாம்.
Sick Kids hospitalஇன் மருத்துவர்கள் வந்து பார்க்கும்போது, குழந்தை வெளிறிப்போயிருக்கவே, அதற்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இரத்தம் ஏற்ற ஏற்ற, குழந்தையின் தலையிலிருந்து இரத்தம் கொட்டத் துவங்கியிருக்கிறது.
ஆக, குழந்தையின் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது என்பதையே Sick Kids hospital ஊழியர்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனாலும், குழந்தைக்கு ஏற்கனவே ஏராளம் இரத்தம் வெளியேறிவிட்டதால், அதன் இதயத்தால் போதுமான அளவில் இரத்தத்தை உடலில் மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியாததால், அதன் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் துவங்கியுள்ளன. குழந்தையின் மூளையும் சேதமடைந்துள்ளது.
இரண்டு நாட்களில் குழந்தை ஆனந்த் இறந்துவிட்டிருக்கிறான்!
இவ்வளவு தவறுகள் நிகழ்ந்தும், Brampton Civic Hospital மருத்துவமனை, குழந்தைக்கு என்ன நேரிட்டது என்று பெற்றோரிடம் கூறவும் இல்லை, vacuum முறையில் பிரசவம் பார்க்க ஒப்புதல் பெறவும் இல்லை என்பதுடன் தங்கள் தவறுக்கு மன்னிப்பும் கேட்கவில்லையாம்.
இது தொடர்பாக, ஒன்ராறியோ மருத்துவர்கள் அமைப்பிடம் குழந்தையின் பெற்றோர் புகாரளித்துள்ள நிலையில், Brampton Civic மருத்துவமனை, முறைப்படி மன்னிப்புக் கோரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள் குழந்தையின் பெற்றோர்.
ஒன்ராறியோ மருத்துவர்கள் அமைப்பின் பதிலுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எனக்கு நீதி கிடைக்கும் வரை, என்னால் இயன்றவற்றைச் செய்வேன் என்கிறார் ஸ்வாதி!