உறைந்த ஏரியில் உயிருக்கு போராடிய சிறுவர்கள்... சிறுமி ஒருவரின் துணிச்சல்: வெளிவரும் புதிய பின்னணி
பர்மிங்காமில் உறைந்த ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சிறுவர்களை காப்பாற்ற பாடசாலை மாணவி ஒருவர் மரக்கிளையால் முயன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுமி துணிச்சலுடன் அவர்களை காப்பாற்ற
பர்மிங்காமில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியானது வெப்பநிலை சரிவடைந்ததையடுத்து உறைந்தது. குறித்த ஏரியில் விளையாடிய சிறார்கள் தவறிவிழுந்து விபத்தில் சிக்கியதில் நால்வர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.
@getty
இதில் மூவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். 6 வயதுடைய சிறுவன் தற்போதும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளான். இந்த விபத்தில் சிக்கிய மேலும் இருவரது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுவர்கள் விபத்தில் சிக்கியதை அறிந்து 13 வயது Oliwia Szewc என்ற சிறுமி துணிச்சலுடன் அவர்களை காப்பாற்ற களமிறங்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மரக்கிளைகளால் சிறுவர்களை அந்த சிறுமி காப்பாற்ற முயன்றுள்ளார். கடும் குளிரில் சிறுவர்கள் இருவர் தண்ணீரில் தத்தளிப்பதை தாம் பார்த்ததாக கூறும் சிறுமி, எஞ்சியவர்கள் தமது பார்வைக்கு அப்போது தென்படவில்லை என்றார்.
Image: Rowan Griffiths
அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது
நடந்த சம்பவம் தமக்கு அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியதாக கூறிய அவர், அப்போது என்ன செய்ய வேண்டும் என அறியாமல் ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது தம்முடன் இருந்த நண்பர்களும் தாமும் இதுபோன்ற ஒரு சூழலை முன்னர் எதிர்கொண்டதும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்கள் தத்தளிப்பதை தாமும் நண்பர்களும் நேரில் பார்த்ததாக கூறியுள்ள அவர், அவர்களை காப்பாற்ற ஏதேனும் வழியிருக்கிறதா என்பதை முயற்சிக்கும் நிலையில் 999 இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டுள்ளதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
Image: Darren Quinton
சிறுவர்களுக்கு உதவ
இதனையடுத்து மரக்கிளையை பயன்படுத்தி சிறுவர்களுக்கு உதவலாம் என முயன்றுள்ளார். மட்டுமின்றி, அவசர உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து சேரும் வரையில் Oliwia Szewc மற்றும் அவரது தோழிகள் அப்பகுதியில் காத்திருந்துள்ளனர்.
இதனிடையே, விபத்தில் சிக்கிய சிறுவனின் உறவினர் ஒருவர் ஏரியில் குதிக்க, அந்த நபரை பின்னர் பொலிசார் மீட்டுள்ளதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஞாயிறு மதியம், உள்ளூர் நேரப்படி 2.30 மணியளவில் Babbs Mill Park ஏரியில் சிறுவர்கள் சிலர் உறைந்துபோன பகுதியில் விளையாடியபடி இருந்துள்ளனர்.
இதில் திடீரென்று அந்த சிறுவர்கள் தவறி ஏரிக்குள் விழுந்து மூழ்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் மீட்கப்பட்ட நால்வரில் மூவர் தற்போது மரணமடைந்துள்ள நிலையில், 6 வயதுடைய சிறுவன் தீவிர சிகிச்சையில் உள்ளான்.