இத்தாலியில் நடந்த மோசமான சம்பவம்... பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரத்திற்கு நெருக்கடி
முன்னாள் மன்செஸ்டர் சிட்டி வீரரும் பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரமுமான Robinho இத்தாலியில் நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பில் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.
சர்வதேச கைதாணை
பிரேசில் உச்ச நீதிமன்றம் குறித்த தண்டனையை உறுதி செய்துள்ளது. Robinho-வுக்கு எதிராக இத்தாலி நீதிமன்றம் சர்வதேச கைதாணையை பிறப்பித்திருந்தது. ஆனால் 7 ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்து தப்பி சாவ் பாலோவில் வாழ்ந்து வந்துள்ளார்.
2017ல் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியிருந்தது. தற்போது சிறப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இத்தாலிய அதிகாரிகள், சிறை தண்டனையை Robinho பிரேசிலில் முன்னெடுக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து Robinho உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார் என்றே கூறபப்டுகிறது. கடந்த 2013 ஜனவரி மாதம் ஒரு விடுதியில் அல்பேனியப் பெண் ஒருவரை வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் ஆறு பேர்களில் ராபின்ஹோவும் ஒருவர்.
பிரேசில் நீதிமன்றம் உறுதி
அப்போது ராபின்ஹோ AC Milan அணியில் இணைந்திருந்தார். நவம்பர் 2017ல் இத்தாலிய நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். மேல்முறையீடு நடவடிக்கைகள் முடிவடையாத வரையில் தண்டனைக் காலம் தொடங்காது என்பது இத்தாலிய நாட்டில் அமுலில் இருக்கும் விதி.
மட்டுமின்றி, வெளிநாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குடிமகனை பிரேசில் அரசாங்கமும் எளிதில் ஒப்படைத்துவிடாது. இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே கைது செய்யப்படுவார் என்ற நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரேசில் நீதிமன்றமும் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளதை அடுத்து, 9 ஆண்டுகள் சிறை தண்டனையை ராபின்ஹோ அனுபவிக்க இருக்கிறார். இந்த வழக்கில் தாம் அப்பாவி என்றே அவர் தெரிவித்து வருகிறார்.