ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்துக்கு வெடிகுண்டு எச்சரிக்கை: சந்தேகத்துக்குரிய பொருள் கண்டுபிடிப்பு
பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்துக்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தேகத்துக்குரிய பொருள் கண்டுபிடிப்பு
நேற்று மதியம், பாரீஸில் ஒலிம்பிக் நடைபெறும் Stade de France மைதானத்தில் சந்தேகத்துக்குரிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் எடுத்த பொலிசார், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தார்கள்.

நல்ல வேளையாக நேற்று மதியம் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நேரத்தில், முதல் பிரிவு விளையாட்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டிருந்ததால், விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் யாரும் இல்லை.
அத்துடன், மைதானத்தை ஒட்டி அமைந்திருந்த Porte de Paris ரயில் நிலையமும் மூடப்பட்டுள்ளது.
பின்னர், நிலைமை சகஜமாக, மாலை துவங்கும் விளையாட்டுப் போட்டிகளைக் காண மாலை 5.00 மணியளவில் மீண்டும் மக்கள் குவியத் துவங்கியுள்ளார்கள்.

அந்த மைதானத்தில், விளையாட்டுப் போட்டிகளைக் காண சுமார் 80,000 பார்வையாளர்கள் கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கிடையில், கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய பொருள் என்ன? ஏதேனும் ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருந்ததா என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |