தயாரானது பிரெக்சிட் ஒப்பந்தம்... இன்னும் சிறிது நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் போரிஸ் ஜான்சன்
நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதுபோல் இருக்கிறது.
இன்னும் சிறிது நேரத்தில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.
ஜனவரி 1ஆம் திகதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், ஆளுக்கொரு பக்கம் கோபமாக பிய்த்துக்கொண்டு போவதைவிட, சுமூகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளாற்போல் தெரிகிறது.
அதாவது ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டா, அல்லது ஒப்பந்தம் ஒன்றுடன் சுமூகமாக முடியும் பிரெக்சிட்டா (Deal or No-Deal Brexit?) என்ற கேள்விக்கான பதில், ஒப்பந்தத்துடனான பிரெக்சிட் என்பதுதான்!
பிரித்தானியா சார்பில் Lord Frost, ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் Michel Barnier மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து தவறேதும் இல்லாதபடி கவனமாக உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் குறித்து நேற்றிரவு தனது சக அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த போரிஸ் ஜான்சன், இன்னும் சில மணி நேரத்தில் அது குறித்த விவரங்களை வெளியிட இருக்கிறார்.
பிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என, பிரித்தானியா விரும்பியது போலவே உருவாக்கப்பட்டுள்ளது போல் தோன்றும் அந்த ஒப்பந்தம், இப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஒப்பந்தம் தயாராகிவிட்டது என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னரே, பிரித்தானிய பவுண்டின் மதிப்பு அதிகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

