பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடி உரிமம் வழங்கியுள்ள தீவு: மோதலை தணிக்க முயற்சி
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் பிரெஞ்சு படகுகளுக்கு மீன்பிடி உரிமம் வழங்குவதில் தொடர்ந்து உரசல் இருந்துவருகிறது.
பிரெக்சிட் ஒப்பந்தத்துக்குப் பின், சேனல் தீவுகளில் ஒன்றான ஜெர்ஸி தீவின் அருகில் மீன்பிடிக்க பிரெஞ்சு படகுகளுக்கு பிரித்தானியா உரிமம் வழங்கவில்லை என்பதுதான் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள நிலையில், மற்றொரு சேனல் தீவான Guernsey தீவு, தனது எல்லையில் மீன் பிடிக்க 40 பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு உரிமம் வழங்கியுள்ளது.
Guernsey தீவுப்பகுதியில் மீன் பிடிக்க 58 படகுகள் உரிமம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், 40 படகுகளுக்கு உரிமம் வழங்கியுள்ள அத்தீவு அதிகாரிகள், பின்னர் மேலும் மூன்று படகுகளுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இங்கு குறிப்பிடவேண்டிய ஒரு விடயம் என்னெவென்றால், ஜெர்ஸி தீவோ, அல்லது Guernsey தீவோ பிரித்தானிய தீவுகள் அல்ல. அவை இரண்டுமே சுயாட்சி கொண்ட, சில குறிப்பிட்ட விடயங்களுக்காக மட்டும் பிரித்தானியாவை சார்ந்திருக்கும் தீவுகள் ஆகும். ஆனால், பிரெக்சிட்டுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளில் அவற்றின் அருகே மீன் பிடிப்பதும் ஒரு பாகமாக அமைந்துவிட்டடது.
இந்நிலையில், பிரான்ஸ் இந்த தகவலை வரவேற்பதாக அறிவித்துள்ளது.