பொய்கள், தவறான வாக்குறுதிகளின் தயாரிப்பு தான் ‘பிரெக்சிட்’ ! இனி பிரித்தானியா-பிரான்ஸ் உறவு எப்படி? ஜனாதிபதி மாக்ரோன் முக்கிய தகவல்
பிரெக்சிட் பொய்கள் மற்றும் தவறான வாக்குறுதிகளின் தயாரிப்பு என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் விமர்சித்துள்ளார்.
பல மாதங்களாக இடம்பெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 31 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன், பிரித்தானியா எங்கள் அண்டை நாடாகவே உள்ளது, அதேசயம் எங்கள் நட்பு மற்றும் கூட்டாளி நாடாகவும் உள்ளது.
ஐரோப்பாவை விட்டு வெளியேறுவதற்கான இந்த முடிவு, இந்த பிரெக்சிட், ஐரோப்பிய அசௌகர்யத்தின் குழந்தை மற்றும் ஏராளமான பொய்கள், தவறான வாக்குறுதிகளின் தயாரிப்பு என்று மாக்ரோன் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் இறையாண்மையின் வலிமை குறித்தும் மாக்ரோன் கேள்வி எழுப்பினார்.
பிரான்ஸ் ஐரோப்பாவில் முதன்மையானது, எங்கள் விதி மற்றும் வாழ்க்கையின் தலைவனாக இருப்பதை உறுதிப்படுத்த அனைத்த விதமான நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் கூறினார்.
எங்கள் நலன்கள், தொழில்கள், மீனவர்கள் மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு, எங்கள் எதிர்கால உறவுகளை ஒழுங்கமைக்க ஒரு உடன்பாட்டை எட்டினோம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன் கூறினார்.