சும்மா மிரட்டாதீர்கள்... நாங்களும் பழிவாங்குவோம்: பிரான்சுக்கு பிரித்தானியா பதிலடி
சும்மா மிரட்டிக்கொண்டிருந்தால் நாங்களும் பேசாமல் இருக்கமாட்டோம்... நீங்கள் பின்வாங்காவிட்டால் நாங்களும் பழிக்குப் பழி வாங்குவோம் என பிரான்சுக்கு பிரித்தானியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து மீன்பிடித்தல் பிரச்சினை பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் மோதலை வளர்த்துக்கொண்டே செல்கிறது.
பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரான்ஸ் மீன்பிடி படகுகளுக்கு போதுமான அளவில் உரிமம் வழங்கவில்லை, அது பிரெக்சிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என பிரான்ஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதம் 2ஆம் திகதிக்குள் மீன்பிடித்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால், பிரித்தானிய மீன்பிடி படகுகளை தடுப்போம் என்றும், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பயணிக்கும் பிரித்தானிய படகுகள் மற்றும் ட்ரக்குகளுக்கான சுங்கச் சோதனை முதலான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவோம் என்றும் எச்சரித்துள்ளது பிரான்ஸ்.
அத்துடன், தாங்கள் பொறுமை இழந்துவிட்டதாகவும், அடுத்ததாக பிரித்தானியாவுக்குச் சொந்தமான சேனல் தீவுகளுக்கு செல்லும் மின்சாரத்தைத் துண்டித்துவிடுவோம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் செய்தித்தொடர்பாளரான Gabriel Attal எச்சரித்துள்ளார்.
ஆனால், இவ்வளவு நாள் மவுனம் காத்து வந்த நிலையில், இப்படி சும்மா மிரட்டிக்கொண்டிருந்தால் நாங்களும் பேசாமல் இருக்கமாட்டோம், நாங்களும் பழிவாங்குவோம் என தற்போது பிரித்தானிய தரப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நமக்கு ஒரு நெருங்கிய கூட்டாளி, அதனிடம் இருந்து இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள பிரித்தானிய அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், பிரான்சின் மிரட்டல்கள் சர்வதேச சட்டத்துக்குட்பட்டவையாக இல்லை என்றும் பிரான்ஸ் பின்வாங்காவிட்டால், பிரித்தானியாவும் சரியான வகையில் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என்று கூறியுள்ளார்.