அவரால் மட்டுமே எனது 400 ரன் சாதனையை தகர்க்க முடியும் - ஜாம்பவான் பிரையன் லாரா
யஷஸ்வி ஜெய்ஸ்வாலினால் தனது 400 ஓட்டங்கள் சாதனையை முறியடிக்க முடியும் என ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
பிரையன் லாரா
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா (Brian Lara) சமீபத்தில் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் எடுத்த 400 ஓட்டங்கள் எனும் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) தனது சாதனை முறியடிக்க வாய்ப்புள்ளது என லாரா தெரிவித்துள்ளார்.
ஜெய்ஸ்வால்
அவர் ஜெய்ஸ்வால் குறித்து கூறுகையில், ''அவரைப் பற்றி நான் வெளிப்படுத்தக்கூடிய ஒரே விடயம் என்னவென்றால், அவர் ஒரு சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் என்று நினைக்கிறேன். நான் அவரைப் பற்றி விரும்புவது என்னவென்றால், அவர் மிகவும் பணிவானவர் மற்றும் பணியாற்றத் தயாராக இருக்கிறார்.
நான் அவரை கடந்த ஆண்டு முதல் முறையாக சந்தித்தேன். உடனடியாக நான் அவருடன் இணைந்திருப்பதைக் கண்டேன். டெஸ்ட் போட்டியில் நான் படைத்திருக்கும் சாதனைக்கு (400 ஓட்டங்கள்) அச்சுறுத்தல் இருப்பதாக உணருகிறேன்.
எனது டெஸ்ட் சாதனையை ஜெய்ஸ்வால் தகர்க்க நல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கான திறன் அவரிடம் இருக்கிறது. அதிரடியாக ஆடும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களால் தான் எனது சாதனையை தகர்க்க முடியும். ஏதாவது ஒரு கட்டத்தில் எனது சாதனை உடைந்துவிடும் என்று நினைக்கிறேன்'' என தெரிவித்தார்.
தற்போது வரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால், 3 சதங்களுடன் 1028 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதில் 2 இரட்டை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |