மேக்ரான் மனைவி அவமதிக்கப்பட்ட விவகாரம்: மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ள தம்பதியர்
Brigitte Macron files another lawsuit against Candace Owens: தன்னை தொடர்ந்து அவமதித்துவரும் கேண்டேஸ் ஓவன்ஸ் மீது பிரிஜிட் மேக்ரான் மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுடைய மனைவி, ஆணாகப் பிறந்தவர் என்று கூறி அவரை அவமதிக்கும் வகையில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர் அமெரிக்கப் பெண்ணான கேண்டேஸ் ஓவன்ஸ்.
மேக்ரான் மனைவியை ஆண் என விமர்சிக்கும் பெண்
கேண்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens), ஒரு தொலைக்காட்சி பிரபலம் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்.

இந்த கேண்டேஸ், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானை கேலி பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்.
குறிப்பாக, பிரிஜிட் பெண் அல்ல, அவர் ஆணாகப் பிறந்தவர், அவர் ஒரு திருநங்கை என கேண்டேஸ் கூறுவதுண்டு.
அதற்காகவே ’Becoming Brigitte’ என்னும் பெயரில் எட்டு பாகங்கள் கொண்ட போட்காஸ்ட் ஒன்றை நடத்தினார் இந்த கேண்டேஸ் ஓவன்ஸ்.
வழக்கு தொடர்ந்த மேக்ரான் தம்பதியர்
இந்நிலையில், கேண்டேஸ் மீது அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்கள் மேக்ரான் தம்பதியர்.

ஆனால், கேண்டேஸ் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள நாஷ்வில் (Nashville) நகரில் வாழ்வதாகவும், கேண்டேஸ் மீது டெலாவேர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் நீதிபதி கூறிவிட்டார்.
இரண்டாவது வழக்கு இந்நிலையில், கேண்டேஸ் ஓவன்ஸ் மீது மேக்ரான் தம்பதியர் மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இம்முறை, கேண்டேஸின் சொந்த மாகாணமான டென்னஸ்ஸி மாகாணத்திலேயே அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக மேக்ரான் தம்பதியரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
கேண்டேஸ், பிரிஜிட் மேக்ரானின் பாலினம் குறித்து விசித்திரமான, அவதூறான மற்றும் நம்பமுடியாத கதைகளைப் பரப்பிவருவதாக மேக்ரான் தம்பதியரின் சட்டத்தரணிகள் வாதம் முன்வைத்துள்ளார்கள்.
அத்துடன், கேண்டேஸ் தனது போட்காஸ்டை, மேக்ரான் தம்பதியரைப்பற்றிய தனது பொய்களை பரப்புவதற்கும், அவர்களை கேலி செய்து காசு பார்ப்பதற்கும், நன்கொடைகளைச் சேகரிப்பதற்கும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என்றும் மேக்ரான் தம்பதியரின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.