வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஆண் பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி: அதிர்ச்சி பின்னணி
பிரான்சில் வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி பெயரை ஹேக்கர்கள் குழு ஒன்று ஆணின் பெயராக மாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிறப்பிலேயே பெண்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவி தற்போது மிக மோசமான சட்டப் போராட்டத்தில் சிக்கியுள்ளார். தாம் பிறப்பிலேயே பெண் என்பதை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இணையத்தில் அவர் மீது அருவருப்பான கருத்துக்களைப் பதிவு செய்தவர்களில் 10 பேர்கள் தற்போது விசாரணையை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையிலேயே 72 வயதான பிரிஜிட் மேக்ரான் பாரிஸில் அவமானத்தை எதிர்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தேசிய வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஹேக்கர்கள் பிரிஜிட் மேக்ரான் பெயரை ஜீன்-மைக்கேல் என்று மாற்றியதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 2024 இல் பிரிஜிட் தாக்கல் செய்த வரி அறிக்கைகளின் வழக்கமான தணிக்கையின் போதே மோசமான இந்த செயல் கண்டுபிடிக்கப்பட்டது.
திருத்தியுள்ளது உறுதி
ஜனாதிபதி மேக்ரானின் நிர்வாகத் தலைவர் Tristan Bomme தெரிவிக்கையில், வழக்கமாக வரி தாக்கல் செய்யும் தளத்தில் நுழைந்த பிரிஜிட் மேக்ரான், அதில் தமது பெயர் மாற்றப்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
இதனையடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு அவர் புகாரும் அளித்துள்ளார். ஆனால், மென்பொருள் கோளாறாக இருக்கலாம் என முதலில் பரிசோதித்த அதிகாரிகள், அதன் பின்னரே ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து அவர் பெயரை திருத்தியுள்ளதாக உறுதி செய்தனர்.

தற்போது பிரிஜிட் மேக்ரானின் புகாரை அடுத்து சந்தேக நபர்கள் இருவரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பிரிஜிட் மீது அருவருப்பான கருத்துகளைப் பதிவு செய்த 10 பேர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |