மேக்ரான் மனைவி குறித்து அவதூறு: உச்சநீதிமன்றம் செல்லும் பிரிஜிட் மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் ஆணாகப் பிறந்தவர் என வதந்தி பரப்பிய பெண்கள் இருவரை பிரான்ஸ் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று விடுவித்துவிட்டது.
இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பில் உச்சநீதிமன்றம் செல்ல இருக்கிறார் பிரிஜிட் மேக்ரான்.
மேக்ரான் மனைவி ஆணாகப் பிறந்தவரா?
2021ஆம் ஆண்டு, ஆவிகளுடன் பேசும் பெண்ணான அமாண்டின் (Amandine Roy) என்பவர், ஊடகவியலாளர் என தன்னை அழைத்துக்கொள்ளும் நடாஷா (Natacha Rey) என்னும் பெண்ணை யூடியூப் சேனல் ஒன்றிற்காக நேர்காணல் செய்தார்.
அப்போது அவர்கள் இருவரும் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் குறித்த சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றைக் குறித்து விவாதித்தார்கள்.
அமாண்டின், ஜீன் மைக்கேல் (Jean-Michel Trogneux) என்னும் ஆண், அறுவை சிகிச்சை மூலம் தன்னை ஆணாக மாற்றிக்கொண்டு, தன் பெயரையும் பிரிஜிட் என மாற்றிக்கொண்டு மேக்ரானை திருமணம் செய்துகொண்டதாக கூறினார்.
உண்மையில், Jean-Michel Trogneux என்பவர் பிரிஜிட்டின் சகோதரர் ஆவார். இந்த செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்க, பிரிஜிட் நீதிமன்றத்தில் அமாண்டின் மற்றும் நடாஷா மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம், பிரிஜிட்டுக்கு 8,000 யூரோக்களும் அவரது சகோதரருக்கு 5,000 யூரோக்களும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
தீர்ப்பை எதிர்த்து அமாண்டின் மற்றும் நடாஷா இருவரும் மேல்முறையீடு செய்தார்கள்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், அமாண்டின் மற்றும் நடாஷா இருவருக்கும் பிரிஜிட் குறித்து விமர்சிக்க எல்லா உரிமையும் உள்ளது என்று கூறி, அவர்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது.
அத்துடன், அவர்கள் எந்த இழப்பீடும் வழங்கத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.
உச்சநீதிமன்றம் செல்லும் பிரிஜிட் மேக்ரான்
இந்நிலையில், தன்னை அவமதித்த அந்த பெண்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, பிரான்சின் உச்சநீதிமன்றமான the Court de Cassation என்னும் நீதிமன்றத்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் பிரிஜிட் மேக்ரான்.
அத்துடன், பிரிஜிட்டின் சகோதரரான Jean-Michel Trogneuxம் உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக பிரிஜிட்டின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |