போர் வெடிக்கும் அபாயம்... பிஞ்சு குழந்தையுடன் உக்ரைனில் சிக்கிக்கொண்ட பிரித்தானிய குடும்பம்
உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற நிலையில், பிஞ்சு குழந்தையுடன் பிரித்தானிய குடும்பம் ஒன்று வெளியேற முடியாமல் உக்ரைனில் சிக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் உக்ரைன் தலைநகருக்கு குடிபெயர்ந்துள்ளனர் வடக்கு லண்டனைச் சேர்ந்த 40 வயதான பென் காரட் மற்றும் அவரது மனைவி ஆலிஸ். இவர்களுக்கு வாடகைத் தாய் ஊடாக உக்ரைனில் வைத்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தற்போது போர் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், குழந்தைக்கான அவசர ஆவணங்கள் தயார் படுத்தும் நோக்கில் தூதரகத்தில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை தயார் நிலையில் இருக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற பீதியில் மக்கள் வெளியேறி வரும் நிலையில், புதன்கிழமை வரையில் காத்திருப்பது என்பது உண்மையில் கொடுமையானது என்கிறார் பென் காரட்.
தற்போது குழந்தைக்கான ஆவணங்கள் தயாராகாத நிலையில், உக்ரைனைவிட்டு வெளியேற ,முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பென் காரட் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் நேற்றிரவு முதல் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் சுமார் 6,000 பிரித்தானியர்கள் வசிப்பதுடன் வேலை பார்த்தும் வருகின்றனர். வெளியேறும் உத்தரவு அளிக்கப்பட்டும் பல பிரித்தானியர்கள் உக்ரைனில் தங்கவே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிலர், தங்கள் பிள்ளைகளை நாட்டில் பத்திரமாக விட்டுவிட்டு, திரும்பி வருவதாகவும், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதி அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.