புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி
இத்தாலியில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் பிரித்தானிய மாணவி ஒவர் புதர்களுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, பயங்கரமான பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்டுள்ளார்.
வன்கொடுமை
அந்த 21 வயது மாணவி மிக மோசமான நிலையில் தெருவில் தத்தளித்துக் கொண்டிருந்ததை டாக்ஸி சாரதி ஒருவர் கண்டு அவரை மீட்டுள்ளார்.
வெளியான தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை மாலை ரோமில் உள்ள வில்லா போர்கீஸ் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பேருந்துக்கு காத்திருந்த பிரித்தானிய மாணவியை அந்த மர்ம நபர் பின்னால் இருந்து எட்டித்தள்ளி, புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவரை வன்கொடுமைக்கு இரையாக்கும் வகையில் தாக்கியுள்ளார். ஆனால், அந்த மாணவி பலத்த குரலில் கூச்சலிட, தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவயிடத்தில் இருந்து தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அந்த மாணவிக்கு ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்த பிறகு தான் விரைந்து சென்று மீட்டதாக டாக்ஸி சாரதி ஃபேபியோ மோசியா தெரிவித்துள்ளார்.
அந்த மாணவி தெருவில் தடுமாறிக் கொண்டிருந்தார். அவர் அழுது கொண்டிருந்தார், அவர் முகம் வீங்கியிருந்தது. அப்போது வாகனத்தின் ஹெட்லைட்களை அவர் மீது ஒளிரச் செய்தேன். அவருக்குப் பின்னால் யாரும் இல்லை என்பதை உணர்ந்தேன் என டாக்ஸி சாரதி குறிப்பிட்டுள்ளார்.
டிஎன்ஏ சோதனை
காயங்களுடன் காணப்பட்ட அவரை நெருங்கி அமைதிப்படுத்த முயன்றதாக மோசியா தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் அலைபேசி செயலிழந்திருந்ததால் அவரால் அப்போது உதவிக்கு அழைக்க முடியவில்லை என்றும் மோசியா கூறியுள்ளார்.
மட்டுமின்றி, மாணவி ஆங்கிலம் மட்டுமே பேசியதால், அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் மோசியா தெரிவித்துள்ளார்.
மாணவி மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டார், ஏனென்றால் அவருடைய அலைபேசி செயலிழந்து காணப்பட்டது, உதவிக்கு எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அதனால் அவர் வியா வெனெட்டோ பகுதி நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கலாம் என மோசியா தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்து, துணை மருத்துவர்கள் வரும் வரை மோசியா அவருடன் இருந்துள்ளார். இதனிடையே, டிஎன்ஏ சோதனைக்காக புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காராபினேரி அதிகாரிகளால் அந்தப் பெண்ணின் ஆடைகள் கைப்பற்றப்பட்டன, அதே நேரத்தில் மேலும் ஆதாரங்களுக்காக தாக்குதல் நடந்த இடம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தாக்குதல் நடத்தியவரைத் தேடி வரும் பொலிசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |