கென்ய ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பில் நிகழ்ந்த விபத்து: பிரித்தானிய சுற்றுலா பயணி உயிரிழப்பு
கென்ய ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரித்தானியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய சுற்றுலா பயணி பலி
கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவின் வாகன அணிவகுப்பில் நிகழ்ந்த துயரமான சாலை விபத்தில் 79 வயது பிரித்தானிய சுற்றுலாப் பயணி எட்கர் சார்லஸ் பிரடெரிக் (Edgar Charles Frederick) உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைரோபியின் பரபரப்பான ந்கோங் சாலையில் ஆடம்ஸ் ஆர்கேட் அருகே வியாழக்கிழமை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது.
பிரித்தானிய குடிமகனான எட்கர் சார்லஸ் பிரடெரிக் அரசு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை தொடர்ந்து பிரித்தானிய சுற்றுலா பயணியின் நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, அவருக்கான பிரேத பரிசோதனை வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர் கென்ய காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பிரடெரிக் கென்யாவில் வசிக்கும் தனது சகோதரி மற்றும் மருமகனைப் பார்க்க வந்த நிலையில் இந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜனாதிபதி ரூட்டோ வாகன அணிவகுப்பு
ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தனது நகர சுற்றுப்பயணத்தின் நான்காவது நாள் பொது நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது ஜனாதிபதியின் வாகனம் அருகில் இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக விபத்துக்குப் பின் சம்பந்தப்பட்ட சாரதி உடனடியாக வாகனத்தை நிறுத்தவில்லை என்று கென்ய செய்தித்தாளான தி ஸ்டார் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இது குறித்து விசாரணை நடத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |