பிரான்சை புறக்கணித்து நேரடியாக ஐரோப்பிய அமைச்சர்களை அணுகிய பிரித்தானியா: மேக்ரானுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு பிரித்தானியா மீண்டும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்தல் பிரச்சினைகள் தொடர்பாக பிரான்சில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒரு பேச்சுவார்த்தைக்கு பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி படேலுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை பிரான்ஸ் திடீரென ரத்து செய்தது.
பிரித்தானியாவை புறக்கணித்துவிட்டதாக பிரான்ஸ் எண்ணிக்கொண்டிருக்க, பிரீத்திபட்டேலோ, பிரான்சை புறக்கணித்து நேரடியாக ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தைகளைத் துவங்கிவிட்டதால் மேக்ரானுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று, நெதர்லாந்து புலம்பெயர்தல்துறை அமைச்சரான Ankie Broekers-Knolஉடன் பேச்சுவார்த்தையும் நடத்தி, முக்கியமான சில ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டுவிட்டார் பிரீத்தி.
அந்த பேச்சுவார்த்தையின்போது, கடந்த வாரத்தில் ஆங்கிலக்கால்வாயில் நிகழ்ந்த துக்கக்கரமான உயிரிழப்புகள், ஐரோப்பிய கூட்டாளிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதையே காட்டியுள்ளதை Ankie ஆமோதித்தாக தெரிகிறது.
ஆகவே, இருதரப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு, புலம்பெயர்வோரை ஆபத்தான வகையில் பயணிக்கச் செய்யும் கடத்தல்காரர்களைக் கையாளுதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இரு நாட்டு பிரதிநிதிகளும் ஆலோசித்துள்ளனர்.
அத்துடன், இந்த வாரம், வேறு சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த பிரீத்தி திட்டமிட்டுள்ளார். இனியும் பிரான்சை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால் பயனில்லை என பிரித்தானியா முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது.