பிரித்தானியா தடுப்பூசியின் முக்கிய சோதனைகளை தவிர்த்தது! அவுஸ்திரேலிய பிரதமர் பரபரப்பு தகவல்
பிரித்தானியாவை போல தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்க மாட்டேன் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
பல உலக நாடுகளில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவுஸ்திரேலியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்காது என கூறப்படுகிறது.
மேலும் மார்ச் மாத இறுதிக்குள் முதல் டோஸ்களை வழங்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மெதுவாக செயல்படுவது குறித்து விளக்கமளித்த அந்நாட்டு பிரதமர் மோரிசன், வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா போன்ற நாடுகள், தடுப்பூசிக்கு அவசரமாக ஒப்புதல் அளித்து ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறினார்.
பிரித்தானியாவின் அவசர தடுப்பூசி ஒப்புதல் முறையை பின்பற்ற மாட்டேன் என அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா பிரித்தானியாவை போன்ற அவசரகால சூழ்நிலையில் இல்லை. எனவே நாங்கள் முக்கிய சோதனைகளை தவிர்க்க வேண்டியதில்லை. தேவையற்ற ரிஸ்க்குகளை நாங்கள் எடுக்க வேண்டியதில்லை என்று மோரிசன் கூறினார்.
அவர்கள் மக்களுக்கு வழங்குவதற்கு முன்பு தடுப்பூசிகளை சோதிப்பதில்லை, இது எனது புரிதல் என்று மோரிசன் கூறினார்.
ஆனால், அவுஸ்திரேலியா இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ளும் என்று வலியுறுத்தினார்.