மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா?: அரசல் புரசலாக வெளிவரும் தகவல்கள்
கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியாக, பிரித்தானிய பத்திரிகைகள் சிலவற்றில், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
அவ்வகையில், The Sun பத்திரிகையில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியான ஒரு கட்டுரையில், போரிஸ் பதவியிழக்கும் நிலையில், அடுத்து வரும் பிரதமர் கண்டர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, லேபர் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, நம்மை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கொண்டு சென்றுவிடுவார் என ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், நேற்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றிலும், 2024 தேர்தலில், லேபர் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பிரித்தானியா ஒற்றைச் சந்தை மற்றும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணையக்கூடும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போதே அது குறித்த விடயங்களை அலசத் துவங்கிவிட்டார்களாம்.
Anna McMorrin என்னும் அமைச்சர், நாம் எப்படியும் ஒற்றைச் சந்தை மற்றும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துவிடுவோம், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
அப்படியானால், 2016இல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என வாக்களித்த நாம் என்ன முட்டாள்களா என்கிறார் கட்டுரை ஆசிரியர்.
ஆக, அடுத்து வரும் பிரதமர், அல்லது அடுத்து ஆட்சியமைக்கும் கட்சி, மீண்டும் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கொண்டு சென்றுவிடுமா?
இந்தக் கேள்விக்கான பதிலை காலம்தான் சொல்லவேண்டும்...