ரஷ்யா காரணம்... பிரித்தானிய வான்வெளியில் இந்த நாட்டு விமானங்களுக்கு தடை
ரஷ்யாவுக்கு மிக ஆபத்தான ஏவுகணைகளை விற்பனை செய்யும் காரணத்தால் ஈரான் விமானங்களுக்கு பிரித்தானிய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான கட்டத்திற்கு நகரும்
ஈரானின் இந்த நடவடிக்கையால் உக்ரைன் - ரஷ்ய போர் மிக ஆபத்தான கட்டத்திற்கு நகரும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் David Lammy குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே ஈரானிய விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மட்டுமின்றி, ஜேர்மனியும் பிரான்சும் இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ளது. ஈரானுடனான இருதரப்பு விமான சேவை நடவடிக்கைகளை ரத்து செய்யவும் முடிவெடுத்துள்ளது.
இதனால் ஈரானிய விமானங்கள் இனி ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் வான்வெளியை பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும். தற்போது ஒவ்வொரு வாரமும் பிரித்தானியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அடுத்த 12 மாதங்களில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் அவை உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்றும் தகவல் கசிந்துள்ளதாக செவ்வாயன்று அமெரிக்க உள்விவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறிப்பிடத்தக்க சேதத்தை
லண்டனில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பின் போது பேசிய ஆண்டனி பிளிங்கன், ஈரானை இந்த விவகாரத்தில் வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு ஏவுகணையுடன் புறப்பட்ட சரக்கு கப்பல் நிறுவனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் அதிகபட்ச இலக்கு தூரம் 75 மைல்கள் என்பதால், உக்ரைனில் குறிப்பிடத்தக்க சேதத்தை ரஷ்யாவால் ஏற்படுத்த முடியும் என்றே கூறப்படுகிறது.
ஆனால், ஏவுகணை தொடர்பில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |