பிரித்தானியாவில் மிக அதிக வரி செலுத்துவோர் பட்டியல்... முதலிடத்தில் கார் மெக்கானிக்கின் மகன்
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு அதிக வரி செலுத்திய முதல் 100 பேர்களின் பட்டியல் வெளியானதில், முதலிடத்தை புலம்பெயர் நபர் ஒருவரின் மகன் பிடித்துள்ளார்.
கார் மெக்கானிக்கின் மகன்
ஜமைக்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த கார் மெக்கானிக் ஒருவரின் மகன், பின்னர் நாட்டிலேயே பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறிய Sir Chris Hohn கடந்த ஆண்டு அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இவர் மொத்தமாக 340 மில்லியன் பவுண்டுகள் தொகையை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளார். சர்ரே பகுதியில் பிறந்த Sir Chris Hohn கடந்த 1993ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு லண்டன் நகரில் பணியாற்றத் தொடங்கினார்.
2003ல் சொந்தமாக தனியார் முதலீட்டாளர்களின் நிதியை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை அமைத்தார். இந்த நிறுவனத்திலேயே, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் முன்னர் ரிஷி சுனக் பணியாற்றியிருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் Sir Chris Hohn சுமார் 930 மில்லியன் பவுண்டுகள் வரியாக செலுத்தியுள்ளார். தற்போது சராசரியாக நாளுக்கு சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளார்.
இரண்டாமிடத்தில் 273 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்திய Betfred நிறுவனர்கள் உள்ளனர். மூன்றாமிடத்தில் Bet365 நிறுவனத்தின் Denise Coates உள்ளார். இவர் குடும்ப சொத்துக்களின் வரியாக 265 மில்லியன் பவுண்டுகள் செலுத்தியுள்ளார்.
சராசரியாக 10.5 மில்லியன்
முதல் 100 பேர்களின் பட்டியலில் ஒவ்வொருவரும் சராசரியாக 10.5 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 4.98 பில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளனர்.
வெதர்ஸ்பூன் உரிமையாளர் சர் டிம் மார்ட்டின் 170 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளார். பாடகர் Ed Sheeran முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் சரிபாதியாக குறைந்து, 19.9 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளார்.
எழுத்தாளர் JK Rowling முதல் 30 இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் 47 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளார். Dale Vince கடந்த ஆண்டு 14.3 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்தியுள்ளர். முதல் முறையாக இவர் 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
Dyson நிறுவனர் சர் ஜேம்ஸ் டைசன் 100 மில்லியன் பவுண்டுகள் வரியாக செலுத்தியுள்ளார். ஆனால் முந்தைய ஆண்டு 460 மில்லியன் பவுண்டுகள் வரி செலுத்திய மாஸ்கோவில் பிறந்த Alex Gerko என்ற வணிகர் இந்த முறை 202 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே வரி செலுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பை கடுமையாக விமர்சித்த Alex Gerko, தனது ரஷ்ய குடியுரிமையை அதன் பின்னர் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |