'பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டி பார்க்க முடியாது' பிரான்ஸ் எச்சரிக்கை!
பிரித்தானியா அஸ்ட்ராஜெனேகாவை வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டி பார்க்க முடியாது என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்ட ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது.
இதனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு மத்தியில் தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவருவதால், முதலில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்துவிட்டு மீதம் இருக்கும் டோஸ்களை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதாக பிரித்தானிய அரசு கூறியிருந்தது.
இதனால், அஸ்ட்ராஜெனேகாவிடமிருந்து மில்லியன் கணக்கான டோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்த பிறகும் மிக்க குறைந்த டோஸ்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
இதனால், ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் கோபத்தை வெளிப்படுத்திவருகின்றன. பெரும்பாலான அஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்துகள் ஐரோப்பிய ஒன்றிய நாடான நெதர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்தநிலையில், ஒப்பந்தம் செய்யப்பட டோஸ்களை விரைவில் வழங்கவில்லை என்றால், மருந்துகளை ஐரோப்பிவிலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரித்தார்.
அதற்கு பதிலளித்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏற்றுமதியை தடைசெய்வது என்பது ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு தானே பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு செயலாகும் என பிளாக்மெயில் செய்தார்.
பின்னர், Ursula von der Leyen முதலில் தங்களுடன் ஒப்பந்தம் செய்த தொகுப்பை பூர்த்தி செய்த பின்னர் பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யும் பணியை தொடங்கவும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Jean-Yves Le Drian, இப்படியே போனால் பிரித்தானியா அதன் இரண்டாவது தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கு மிகவும் போராட வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
மேலும், பிரித்தானியா அதன் அஸ்ட்ராஜெனேகா மருந்துகளை வைத்துக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டி பார்க்க முடியாது என கூறியுள்ளார்.