காதலரைப் பார்த்து லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! 15 ஆண்டுக்கு பின் திருமணம் செய்யும் பிரித்தானிய பெற்றோர்
பிரித்தானியாவில் லொட்டரியில் பரிசை வென்ற ஜோடி, 15 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது திருமண செய்ய உள்ளனர்.
ஒன்றாக வாழ்ந்து வரும் ஜோடி
Norwich நகரின் நோர்போல்க் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் எல்லி லேண்ட். இவர் கார்ல் வார்ட் (43) என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமண நிச்சயம் செய்துகொண்ட இந்த ஜோடி, போதிய பணம் அப்போது இல்லாததால் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனினும், ஒன்றாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வணிக அங்காடியில் பணிபுரிந்து வரும் எல்லி, தனது காதலருடன் அங்கு சென்றுள்ளார். அவர் கழிப்பறையை பயன்படுத்த சென்றபோது, அவருக்காக காத்திருந்த கார்ல் லொட்டரி டிக்கெட் விற்கும் கவுண்ட்டரில் நின்றிருந்தார்.
இதனை கவனித்த எல்லிக்கு அன்றைய தினமே லொட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்று தோன்றியுள்ளது.
லொட்டரி டிக்கெட்
அதனைத் தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் எல்லி லொட்டரி டிக்கெட்டை வாங்கினார். பின்னர் மாலையில் தனது செல்போனில் லொட்டரி குறித்து பார்த்தபோது இன்ப அதிர்ச்சியடைந்தார்.
அவர் வாங்கிய லொட்டரிக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது. இதனால் அந்த ஜோடி மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. கிறிஸ்துமஸ் விருந்துக்கு திட்டமிட்டுள்ள இந்த ஜோடி, 15 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது.
மகிழ்ச்சியில் பேசிய எல்லி
இதுகுறித்து எல்லி லேண்ட் கூறுகையில், 'நான் கழிப்பறைக்கு சென்றபோது கார்ல் எனக்காக காத்திருந்தார். நான் வெளியே வந்தபோது அவர் தேசிய லொட்டரி கவுண்டரில் எனக்காக காத்திருந்தார். அதனால் யூரோ மில்லியன்ஸ் என்ற லொட்டரி டிக்கெட்டை வாங்க அன்றே முடிவு செய்தேன்.
நான் எப்போதும் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை. வெறும் ஆசையில் தான் வாங்கினேன். அதனால் தான் எனது சக ஊழியர் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று கூறும்போது, நான் எதையாவது வென்றால் உங்களுக்கு வெகுமதி அளிப்பேன் என்று கூறுவேன்.
ஒரு மில்லியன் பவுண்டுகளை வெல்லப் போகிறோம் என்று அந்த நேரத்தில் நான் நினைக்கவில்லை. அந்த நாளை நினைக்கும்போது இப்போதும் நான் சிரிக்கிறேன், ஒரு திம் செலவழித்து ஒரு மில்லியனை வென்றுள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
வாடகை வீட்டில் குடியிருக்கும் கார்ல் - எல்லி ஜோடி புதிதாக வீடு வாங்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன் முதல் வெளிநாட்டு பயணமாக டிஸ்னிலேண்ட் செல்ல திட்டமிட்டுள்ளனர்.