பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்...
பிரித்தானியாவில் முதன்முறையாக சிவப்பு அதீத வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுமைக்கும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இதற்கு முன் இல்லாத வகையில், வெப்பம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதீத வெப்பத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எசரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அன்றாடம் செய்யும் வழக்கமான பல்வேறு நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பிரித்தானியாவைப் பொருத்தவரை, வெப்பம் அதிகமாகும்போது மக்கள் உற்சாகமாக கடற்கரைக்கு சென்று விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இது அப்படிப்பட்ட வெப்பம் அல்ல என்று கூறியுள்ளார் வானிலை ஆராய்ச்சி மைய முதன்மைச் செயல் அலுவலரான Penny Endersby.
2020ஆம் ஆண்டின் கோடையில், இங்கிலாந்தில் மட்டும் கூடுதலாக 2,500 பேர் அதீத வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளார்கள். இத்தகைய உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என செஞ்சிலுவைச் சங்கம் கணித்துள்ளது.
credits - bbc
வானிலை ஆராய்ச்சி மையத்தின் சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, சாலைகள் வெயிலில் உருகிவிடக்கூடாது என்பதற்காக சாலைகளில் மணல் கொட்டும் பணி துவங்கியுள்ளது. ரயில்களுக்கு வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, சில பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட உள்ளன, மருத்துவமனை அப்பாயிண்ட்மெண்ட்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
எல்லாவற்றிற்கும் மேல், பிரித்தானிய சுகாதாரச் செயலகம், மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளுக்கு தனது அதிகபட்ச எச்சரிக்கையான நான்காவது மட்ட வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், அச்சத்தை ஏற்படுத்தும் அதன் எச்சரிக்கை, இந்த அதீத வெப்பத்தால், பிரச்சினை வயதானவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படத்தக்கவர்களுக்கு மட்டும் அல்ல, நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் கட்டுடனும் இருப்பவர்களும் பாதிப்புக்குள்ளாகி, உயிரிழக்க நேரிடும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.