பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லொறி சாரதிகள் பற்றாக்குறை காரணமாக பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என உணவுத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரெக்சிட் மற்றும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள இரட்டைத் தாக்கம் காரணமாக, குளிரூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், உடனடியாக அவர் இந்த பிரச்சினையில் தலையிட்டு, கிழக்கு ஐரோப்பிய சாரதிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரசு இந்த பிரச்சினையில் தலையிடாவிட்டால், பிரித்தானிய உணவுப்பொருட்கள் விநியோகத்தில் கணிக்க முடியாத அளவுக்கு பிரச்சினை ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 85,000 முதல் 100,000 லொறி சாரதிகள் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், பல்பொருள் அங்காடிகளில் இன்னும் சில வாரங்களில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.