ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியபின் மற்றொரு அமைப்பில் இணைந்துள்ள பிரித்தானியா: சில தகவல்கள்...
பிரெக்சிட், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபின், பல்வேறு பிரச்சினைகளை, குறிப்பாக வர்த்தகம் தொடர்பில் பல தடைகளை சந்தித்தது பிரித்தானியா.
மீன் பிடித்தல் முதல் வட அயர்லாந்து பிரச்சினைகள் வரை
வட அயர்லாந்துக்கும் மாமிசம் முதலான பொருட்கள் அனுப்புவது முதல், பிரான்சுடன் மீன் பிடித்தல் பிரச்சினை வரை பல பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்தது பிரித்தானியா.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஒரு கூட்டாளியை தேடிக்கொண்டே இருந்தது பிரித்தானியா.
புதிய அமைப்பில் இணைந்தது
இந்நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின், பசிபிக் பிராந்திய விரிவான, முற்போக்கான கூட்டாண்மை ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) என்னும் ஒப்பந்தத்தின் கீழுள்ள அமைப்பில் இன்று இணைந்துள்ளது பிரித்தானியா.
இந்த அமைப்பின் கீழ் கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, மெக்சிகோ, நியூசிலாந்து, சிங்கப்பூர், புரூனே, Darussalam, சிலி, மலேசியா, பெரு மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகள் உள்ளன.
Photograph: Jonathan Brady/PA
பிரதமர் புகழ்ச்சி
இந்த இணைப்பை புகழ்ந்துள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி, இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்றும், CPTPPயில் இணையும் முதல் ஐரோப்பிய நாடு பிரித்தானியா என்றும் கூறியுள்ளார்.
இந்த அமைப்பில் இணைந்ததால், புதிய வேலைகள், வளர்ச்சி மற்றும் புதுமைக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அவர்.
என்ன நன்மை?
இந்த அமைப்பில் இணைந்ததால் பிரித்தானியா 500 மில்லியன் மக்கள் வாழும் பல நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். சீஸ், கார்கள், சாக்லேட், இயந்திரங்கள், சிலவகை மதுபானங்கள் முதலான பொருட்கள் மீதான வரிகள் குறையும் என்பதால் பொருளாதாரம் உயரும்.
ஆனால், CPTPPயில் இணைந்துள்ளதால் பிரித்தானியாவின் பொருளாதாரம் ஓரளவே உயரும் என சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதுடன், இந்த அமைப்பில் இணைந்துள்ளதால் இனி ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் வாய்ப்பு கடினமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், என்னதான் CPTPPயில் இணைந்தாலும், அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஈடாகாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம், சீனாவும் இந்த அமைப்பில் சேர முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.