'டாப்-அப் தடுப்பூசி' திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிரித்தானியா!
புதிது புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸின் வகைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க பிரித்தானிய அரசு வருடாந்திர டாப்-அப் தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
பிரித்தானிய அரசு மே மாதத்திற்குள் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை நோக்கி செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், இலையுதிர்காலத்தில் இருந்து கொரோனா வைரஸின் புதிய வகைகளை எதிர்த்துப் போராடுவதற்கான டாப்-அப் நோய்த்தடுப்புத் திட்டத்திற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஊசி திட்டத்திற்கு ஒத்த வருடாந்திர கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் நதீம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி குறித்த சமீபத்திய ஆய்வு ஏமாற்றமளிக்கும் முடிவுகளை பெற்றதால், தென்னாபிரிக்க வகை வைரஸுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்கும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் நதீம் ஜஹாவி கூறினார்.
பிரித்தானியாவில் பள்ளிகள், வணிகங்கள் என அனைத்து மூடப்பட்டுள்ளது, மேலும் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள மூன்றாவது தேசிய ஊரடங்கை விரைவில் நீக்குவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை செய்து வருகிறார்.
பொருளாதாரத்தை மீட்பதற்கான அரசின் வருங்கால திட்டங்களுக்கு இந்த வருடாந்திர தடுப்பூசி திட்டம் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.