தாக்குதல் நடத்த பிரித்தானியா தயார்... பிரித்தானிய விமானப்படை தளபதி அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐ எஸ் ஐ எஸ் - கே தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரித்தானிய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியாயிற்று. பிரித்தானிய படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியாயிற்று. ஆனாலும், ஐ எஸ் ஐ எஸ் - கே என்று அழைக்கப்படும் Islamic State Khorasan மீது பிரித்தானியா தாக்குதல் நடத்தலாம் என பிரித்தானிய விமானப்படைத் தலைவரான Sir Mike Wigston தெரிவித்துள்ளார்.
காபூலில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி இரண்டு பிரித்தானிய குடிமக்கள் உட்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் இந்த ஐ எஸ் ஐ எஸ் - கே அமைப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆப்கானிஸ்தானில் இந்த ஐ எஸ் ஐ எஸ் - கே அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 2,000 பேர் இருக்கலாம் என அமெரிக்க இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பலர், சில நாட்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட ஆப்கன் சிறைகளிலிருந்து வெளியேவந்தவர்கள் ஆவர் என்று கூறியுள்ளார் அவர்.
இதற்கிடையில், ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு எங்கு செயல்பட்டாலும், அதற்கெதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Dominic Raabம் தெரிவித்துள்ளார்.