புலம்பெயர்ந்தோரை புறக்கணித்ததன் பலனை அனுபவிக்கும் பிரித்தானியா
தங்கள் நாடுகளில் நிலவும் பாதகமான சூழல் காரணமாகவோ, அல்லது, வாழ்க்கைத்தரத்தை சற்றே உயர்த்தலாம் என்னும் ஆசையுடனோ, தங்கள் நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது மேலைநாடுகளின் பணத்தின் மதிப்பு அதிகம் என்பதை மனதில் கொண்டு,
எப்படியாவது ஒரு வெளிநாட்டுக்குச் சென்று வாழ்க்கையில் சற்றாகிலும் முன்னேறிவிடலாம் என்னும் ஆசையுடனும் பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளுக்கு ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்கள் செல்வது காலம் காலமாக நடந்துவரும் ஒரு விடயம்.
மாறிவிட்ட மன நிலை
ஆனால், வெளிநாட்டவர்கள் வந்து நம் பொருளாதாரத்தால் பலனடைகிறார்கள், அவர்களால் நம் பிள்ளைகளுக்கு பள்ளியில் இடம் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது,
மருத்துவமனைகளில் நம் நோயாளிகளுடன் போட்டிக்கு வருக்கிறார்கள், வீடுகள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்னும் எண்ணம் பல நாடுகளில் உருவாகத் தொடங்கியுள்ளது.
ஆகவே, புலம்பெயர்தல் எதிர்ப்பு என்பது பல நாடுகளின் அரசியலிலேயே அஜென்டாவாகிவிட்டது.

ஆனால், புலம்பெயர்தல் என்பது இருபக்கம் பலனளிக்கும் ஒரு விடயம் என்பதை பல நாடுகளும் மறந்துவிட்டன. பல மேற்கத்திய நாடுகளில் முதியோரைக் கவனித்துக்கொள்ளும் பணியை புலம்பெயர்ந்தோர்தான் செய்கிறார்கள்.
இன்னொரு முக்கிய விடயம், சர்வதேச மாணவர்கள் செலுத்தம் அதிக கல்விக்கட்டணத்தால், பிரித்தானிய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குறைவான கல்விக்கட்டணம் செலுத்தினால் போதும் என்னும் நிலைகூட காணப்படுகிறது.
புலம்பெயர்ந்தோரை புறக்கணித்த பிரித்தானியா
ஆனால், புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் கூட, பெரும் பொறுப்புகள் கிடைத்ததும், புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவே செயல்படத் துவங்கிவிடுகிறார்கள்.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் ஆனாலும் சரி, சுவெல்லா பிரேவர்மேன் ஆனாலும் சரி, முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆனாலும் சரி, இவர்கள் அனைவருமே புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்தான் என்றாலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துனார்கள்.

சட்டப்படி புலம்பெயர்வோர், சர்வதேச மாணவர்கள் என பலதரப்பினருக்கும் எதிராக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், இப்போது பிரித்தானியாவுக்கே பாதகமாக அமைந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பலனை அனுபவிக்கும் பிரித்தானியா
ஆம், பிரித்தானியா சர்வதேச மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்ததால், மாணவர்கள் வேறு நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள்.
ஆகவே, பிரித்தானிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் குறைந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உள்துறை அலுவலகம் 38,900 விண்ணப்பங்களைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டு, அதாவது, கடந்த மாதம், 28,200 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

சர்வதேச மாணவர்கள் தொடர்பில் விவரங்களை வெளியிடும் Enroly என்னும் அமைப்பு, பிரித்தானியாவின் 31 பல்கலைகளில், டெபாஸிட்களில் 41 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பல பல்கலைக்கழகங்கள் வருவாய்க்கு சர்வதேச மாணவர்களை நம்பியிருக்கும் நிலையில், முந்தைய அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால், பெரிய அளவில் வருவாய் பாதிக்கும் என்கிறார்கள் பிரித்தானிய கல்வித்துறை நிபுணர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |