பிரித்தானியா-பிரான்ஸ் உறவில் பிளவா? நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறிய பரபரப்பு பதில்
AUKUS ஒப்பந்தத்தை தொடர்ந்து பிரித்தானியா-பிரான்ஸ் இடையேயான உறவு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் கூட்டாக ஆசிய பசிபிக் பகுதியில் வரலாற்று AUKUS என்ற சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
AUKUS ஒப்பந்தத்தை தொடர்ந்து பிரான்ஸ் உடனான 40 பில்லியன் டொலர் மதிப்புள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா முடிவுக்கு கொண்டு வந்தது.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
இந்நிலையில், பிரித்தானியா நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் உடனான உறவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியா-பிரான்ஸ் இடையேயான உறவு பாறை போல் உறுதியாக உள்ளது என தெளிவுப்படுத்தினார்.
Sahel ஆக இருந்தாலும், மாலி அல்லது Estonia-வில் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கையாக இருந்தாலும் பிரான்சுடன் தோளோடு தோள் நிற்போம் என கூறினார்.
AUKUS ஒப்பந்ததால் சீனாவும் கடும் கோபமடைந்துள்ள நிலையில், இதனால் சீனா-பிரித்தானியா உறவில் விரிசல் ஏற்படாது என உங்களால் உறுதியளிக்கய முடியுமா என எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் Keir Starmer கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், AUKUS ஒப்பந்தம் வேறு எந்த உலக நாட்டையும் எதிர்க்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதை நாடாளுமன்ற அவை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பிரித்தானியாவுக்கு இருக்கும் நெருங்கிய உறவை பிரதிபலிக்கும் ஒன்றாகும் என ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.