பிரித்தானியா தண்டிக்கப்படவேண்டும்... பிரான்ஸ் பிரதமர் காட்டம்: இரு நாடுகளுக்கும் இடையில் பெரிதாகும் பிரச்சினை
பிரெக்சிட்டுக்காக பிரித்தானியா தண்டிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள பிரான்ஸ் பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை மற்ற உறுப்பு நாடுகள் பிரித்தானியாவைப் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினை பெரிதாகியுள்ள நிலையில், பிரான்ஸ் பிரதமர் Jean Castex, ஐரோப்பிய ஆணைய தலைவரான Ursula von der Leyenக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும்போது எடுத்த உறுதிமொழிகள், பிறகு பேச்சுவார்த்தை மூலம் மாற்றப்படக்கூடியவை அல்ல என்பதையும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் இழப்பு அதிகம் என்பதையும் ஐரோப்பா புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
இவ்வளவுக்கும் காரணம், பிரித்தானிய கடல்பகுதியில் பிரெஞ்சு படகுகள் மீன் பிடிக்க உரிமம் கோர, உரிமம் கோரிய படகுகள் பிரெக்சிட்டுக்கு முன் அதே பகுதியில் மீன் பிடித்தன என்பதை நிரூபித்தால் மட்டுமே உரிமம் வழங்க முடியும் என பிரித்தானியா கூறிவிட்டது.
பிரெஞ்சு படகுகள் பலவற்றால் அதை நிரூபிக்க முடியாததால் அவற்றிற்கு மீன்பிடி உரிமம் வழங்கப்படவில்லை.
தங்கள் படகுகளுக்கு மீன்பிடி உரிமம் வழங்காததால் கோபமடைந்த பிரான்ஸ் தரப்பு, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில், பிரெஞ்சு கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற பிரித்தானிய படகு ஒன்றை பிரான்ஸ் பிடித்துவைத்துக்கொண்டது.
இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினையில் தன் படகு பகடைக்காயாக ஆக்கப்பட்டுவிட்டதாக அந்த படகின் உரிமையாளர் தெரிவித்திருந்த நிலையில், பிரித்தானிய படகுகள் சட்டப்படி மீன் பிடிப்பதை உறுதி செய்ய அரசு என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் செய்யும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.
அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.