தாலிபான்களுடன் பிரித்தானியா நேரடி பேச்சுவார்த்தை: மீதமுள்ள பிரித்தானியர்களை மீட்க திட்டம்
ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள பிரித்தானிய குடிமக்களை மீட்பது குறித்து பிரித்தானிய அதிகாரிகள் தாலிபான் உறுப்பினர்களுடன் நேரடி பேச்சுவார்த்தையியல் ஈடுபட்டுள்ளனர்.
திங்கட்கிழமை இரவோடு அமெரிக்க இராணுவ படையினர் முழுமையாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பிரித்தானிய இராணுவம் ஆப்கானிஸ்தானில் தங்களது மீட்புப் பணியை குறித்த காலக்கெடுவில் முடித்துக்கொண்டது.
நேட்டோ படைகளுக்கு உதவிய 8,000 ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், பல ஆப்கானிஸ்தான்கள் பிரித்தானியாவுக்கு வெளியேற்ற தகுதியானவர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.
பிரித்தானியாவுக்கு இடம்பெயர தகுதி உடையவர்கள் சுமார் 150 முதல் 250 பேர் வரை இன்னும் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக, பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அவர்களையும் பத்திரமாக மீட்டுவர அதிகாரிகள் முடிவுசெய்தனர். இந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கம் தாலிபான்களுடன் ஒரு சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியுள்ளது.
பிரித்தானிய அதிகாரிகளுக்கும் மூத்த தாலிபான் உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் தற்போது நடைபெற்று வருகிறது. மீட்பு நடவடிக்கைக்கு தாலிபான்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
இது குறித்த பேச்சுவார்த்தைக்கு சிறப்பு பிரதிநிதியாக பிரித்தானிய இராஜதந்திரி சைமன் காசு (Simon Gass) தோஹா சென்றிருப்பதாக 10 டவுனிங் தெரு செய்தி தொடர்பாளர் கூறினார்.
அடுத்தகட்டமாக, இன்னும் அதிகமான ஆப்கான் மக்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதற்காக, பாகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 15 மறுமொழி நிபுணர்களை பிரித்தானிய அரசாங்கம் அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.