பிரித்தானியாவின் முதல் வெளிப்படையான லெஸ்பியன் எம்.பி மௌரீன் கோல்கவுன் காலமானார்
பிரித்தானியாவின் முதல் வெளிப்படையான லெஸ்பியன் எம்.பி மௌரீன் கோல்கவுன் தனது 92 வயதில் காலமானார்.
பிரித்தானியாவின் Northampton North தொகுதில் பிரதிநிதியாக நின்று 1974 முதல் 1979 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மௌரீன் கோல்கவுன்.
அவர் எம்.பியாக இருந்த நிலையில் 1977-ஆம் ஆண்டில் அவர் ஒரு பெண் பத்திரிகையாளருடன் உறவில் இருப்பதாக தெரியவந்தது.
இதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பதவிவிலக வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர், தனது பாலியல் தன்மை "ஒரு எம்.பி.யாக என் வேலையைச் செய்வதற்கான என் திறனுடன் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினார். அவரது தைரியம் பலரால் இன்றுவரை பாராட்டப்படுகிறது.
இதனையடுத்து மௌரீன் கோல்கவுன், பிரித்தானியாவின் முதல் வெளிப்படையான லெஸ்பியன் எம்.பி என அழைக்கப்படுகிறார்.
பொருளாதார நிபுணரான அவர் தனது வாழ்நாளில் கருக்கலைப்பு உரிமை, பாலின சமநிலை மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த முக்கிய பிரச்சாரகராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது 92 வயதில் பிப்ரவரி 2-ஆம் திகதி காலமானார். அவருக்கு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
