ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு முக்கிய அறைவிப்பு!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெறும் 7 யூரோக்கள் செலுத்தினால் போதுமானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கான பயணங்கள் குறித்து, குறிப்பாக, ஐரோப்பிய பயணத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு (ETIAS) தொடர்பாக சில பிரித்தானிய ஊடகங்கள் பிரித்தானியர் பிரஜைகளுக்கு மத்தியில் பீதியைத் தூண்டி வருகின்றன.
அதாவது, 2022-ல் ஐரோப்பிய ஒன்றிய விடுமுறைகளுக்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் அதிக பிரெக்சிட் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் பிரெக்சிட்டிற்குப் பிந்தைய கட்டணம் (Post Brexit Fee) ஐரோப்பாவிற்கான பயண செலவுகளை அதிகரிக்கும் என்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, பிரித்தானிய நாட்டவர்கள் ஒவ்வொரு முறையும் ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு "அதிகமான கட்டணம்" செலுத்த வேண்டும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளான பிரித்தானியர்களுக்கு, இந்த ஆவணத்திற்கான கட்டணம் அதிகமாகத் தோன்றலாம்.
ஆனால், அவர்கள் ஏற்கனவே அமெரிக்காவிற்குப் பயணிக்கும் போது, எலக்ட்ரானிக் சிஸ்டம் டிராவல் ஆதரைசேஷன் (ESTA) என்று அழைக்கப்படும் அத்தகைய ஆவணத்தைப் பெற வேண்டும். அதற்கு 13 யூரோக்கள் ($14) செலுத்த வேண்டும்.
உண்மையில், EU-ன் ETIAS ஆனது அமெரிக்காவின் ESTA-ஐ விட மலிவானது, ஏனெனில் ETIAS-ன் விலை 7 யூரோக்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பிரிட்டிஷ் நாட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணம் செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு மட்டுமே ETIAS-க்கு விண்ணப்பிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் அல்ல.
மேலும், ETIAS பயண அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் 18 வயதிற்குட்பட்ட பயணிகள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று நிபுணர்கள் மேலும் விளக்குகின்றனர்.