கலவர பூமியான பிரித்தானியா: என்ன காரணம்?
அந்த நாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டாம், அங்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது என பிரித்தானியாதான் தனது குடிமக்களை அடிக்கடி எச்சரிக்கும்.
ஆனால் இன்று, பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என கனடா, சுவிட்சர்லாந்து, மலேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தத்தம் குடிமக்களை எச்சரிக்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
கலவர பூமியான பிரித்தானியா...
இங்கிலாந்திலுள்ள Southport என்னுமிடத்தில், Axel Muganwa Rudakubana (17) என்னும் இளைஞன், குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கினான்.
அந்த தாக்குதலில், பல பிள்ளைகள் காயமடைந்தார்கள், மூன்று குழந்தைகள் உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து, தாக்குதல்தாரி ஒரு புகலிடக்கோரிக்கையாளர் என்றும், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் வேகமாகப் பரவத் துவங்கின.
அதைத் தொடர்ந்து, புகலிடக்கோரிக்கையாளர்கள் மையங்கள் மீதும், மசூதிகள் மீதும் தாக்குதல்கள் துவங்கியுள்ளன. ஆசியர்களைக் குறிவைத்து தாக்கும் சம்பவங்களும் துவங்கியுள்ளன.
பிரித்தானியா பற்றியெரிகிறது! பொலிசார் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, பலர் காயமடைந்துள்ளார்கள்.
வெளியாகியுள்ள புகைப்படங்களைப் பார்த்தால், போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதும் காட்சிகள் அச்சுறுத்துபவையாக உள்ளன.
பிரித்தானியாவில் இதற்கு முன்பும் பல காரணங்களுக்காக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இப்படி ஒரு வன்மத்தையும், வெறுப்பையும் இப்போதுதான் பார்க்கமுடிகிறது.
கொல்லப்பட்ட தங்கள் மூன்று பிள்ளைகளுக்காக ஒரு பெருங்கூட்டம் கோபப்பட்டதன் விளைவுதானா இது?
அச்சத்தில் ஒரு கூட்டம் மக்கள்
ஏற்கனவே அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருந்த நிலையில், இன்று அந்த வெறுப்பு தீயாய் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
புகலிடக்கோரிக்கையாளர்களும், புலம்பெயர்ந்தோரில் சில குறிப்பிட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் பயந்து வீடுகளுக்குள் பதுங்கியிருக்கிறார்கள்.
வலதுசாரியினர் என்னும் பெயரில் ஒரு கூட்டம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் இந்த வலதுசாரியினர் எங்கிருந்தார்கள்?
இன்னொரு விடயம் என்னவென்றால், மீண்டும் போராட்டங்களுக்கு அந்தக் கூட்டம் அழைப்பு விடுத்துள்ளதாம். போராட்டங்களில் பங்கேற்காவிட்டால் அவமதிப்பார்களாம்.
ஆக, இன்னொரு கூட்டமும் அச்சத்தில் உள்ளது. நான் அந்த மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதற்காக நடத்தப்பட்ட அமைதிப்போராட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காகத்தான் வந்தேன்.
ஆனால், அங்கு பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன், என்னால் அழத்தான் முடிந்தது என்கிறார் ஒரு பிரித்தானியப் பெண்.
ஆக மொத்தத்தில், காலம் காலமாய் வெறுப்பை சேமித்துவைத்திருந்த, வன்முறைக்காக காத்திருந்த ஒரு கூட்டம், வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அந்த ஒரு கூட்டத்தால், உலக அரங்கில் மொத்த பிரித்தானியாவும் அவமானத்தில் தலைகுனிந்து நிற்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |