பிரான்சில் வாழும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் ஓட்டுநர் உரிமம் இழக்கும் அபாயம்: தொடரும் பிரெக்சிட் பிரச்சினை
பிரான்சில் வாழும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் ஓட்டுநர் உரிமம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நிரந்தரமாக பிரான்சில் வாழ்வதற்காக பிரித்தானியாவிலிருந்து வந்துவிட்ட Kim Cranstoun என்பவர், 3,000 பேர் ஓட்டுநர் உரிமம் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளார்கள் என்கிறார்.
வேலை நிமித்தம் பயணிக்க வேண்டியவர்கள் வேலை இழக்கும் அபாயத்திலிருக்கிறார்கள், வர்த்தகர்களால் வேலை செய்ய இயலாத ஒரு சூழல் ஏற்படுள்ளது, வயது முதிர்ந்தோர் மருத்துவருடனான அப்பாயிண்ட்மெண்டுக்காக செல்ல இயலாமல் தவிக்கிறார்கள்.
பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் பலர் தூரமாக கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள், அங்கு பொதுப்போக்குவரத்து வசதியும் இல்லை. ஆகவே, மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பிவிடலாமா என பலர் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் Cranstoun.
6,000 பேர் கொண்ட, பிரான்சில் வாழும் பிரித்தானியர்களின் குழு ஒன்றிற்கு பொறுப்பானவர் அவர்.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமங்களை பிரான்ஸ் உரிமங்களாக மாற்றிக்கொள்ளவேண்டும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்தது. 2021 டிசம்பர் 31 வரை அவர்களுக்கு நேரம் இருப்பதாகவும் பிரான்ஸ் தெரிவித்திருந்தது.
ஆனால், ஜனவரி முதலே தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தை பிரெஞ்சு உரிமமாக மாற்ற விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள், அதற்கான இணையதளத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
அதற்கு காரணம், பிரெக்சிட்டுக்குப் பின்னரும், பிரித்தானியாவும் பிரான்சும் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் ஒப்பந்தம் எதையும் இதுவரை செய்துகொள்ளவில்லை என்பதுதான்.
பிரான்சைப் பொருத்தவரை, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்டினால் 15,000 யூரோக்கள் வரை அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.
சரி, புதிதாக பிரெஞ்சு ஓட்டுநர் உரிமமே எடுத்துக்கொள்ளலாம் என்றால், பிரெஞ்சு மொழியில் கட்டாய வகுப்புகளுக்கு செல்லவேண்டியிருப்பதோடு, பிரெஞ்சு மொழியிலேயே தேர்வும் எழுதவேண்டும், 1,800 யூரோக்கள் செலவில்!
அரசுகள், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் விரைவில் செய்யப்படும் என கூறுகின்றன, ஆனால், அது எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.