காபூலில் முள்வேலியைத் தாண்டி கொடுக்கப்பட்ட குழந்தையை வாங்கிய இராணுவ வீரர்: குழந்தை எங்கே?
காபூல் விமான நிலையத்தில், முள் வேலியைத் தாண்டி கொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர் ஒருவரின் குழந்தையை வாங்கிய பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர், தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அறுவை சிகிச்சை நிபுணரான Lieutenant Colonel Benjamin Caesar, காபூல் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனை ஒன்றில் இராணுவ மருத்துவராக பணியாற்றி வருகிறார்
காபூல் விமான நிலையத்தில், குழந்தை ஒன்றை அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் முள் வேலியைத் தாண்டி வாங்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த குழந்தை தான் பணியாற்றும் மருத்துவமனையில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் Lieutenant Colonel Benjamin.
அப்படி கொடுக்கப்பட்ட குழந்தைகளை, பிரித்தானிய, நார்வே மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்கள் கவனித்து,சிகிச்சை தேவையானால் அளித்து, பிறகு பாதுகாப்பான இடத்துக்கோ அல்லது அவர்களது பெற்றோரிடமோ கையளித்தார்களாம்.
அந்த குறிப்பிட்ட வைரல் புகைப்படத்திலிருந்த அந்த குழந்தை பிறந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருக்குமாம். அந்த குழந்தைக்கு சக இராணுவ வீரர் ஒருவர் பாலூட்ட, பிறகு Lieutenant Colonel Benjamin, அந்த குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நடந்தாராம். பால் குடிந்த அந்த குழந்தை ஏப்பம் விட்ட பிறகு, அதை மற்றொரு செவிலியர் தூங்கவைத்தாராம்.
தனக்கு குழந்தை பிறந்து 14 மாதங்களே ஆகியுள்ளதால், தன் குழந்தையைக் கவனித்துக்கொண்ட அனுபவம், அந்த ஆப்கானிஸ்தான் குழந்தையைக் கவனித்துக்கொள்ள பெரிதும் உதவியதாக தெரிவிக்கிறார் Benjamin.
இப்போது அந்த குழந்தை தன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் Benjamin.