இந்திய மனைவி தொடர்பில் எழுந்த சர்ச்சையால் ராஜினாமா செய்யும் எண்ணம் வரை சென்ற பிரித்தானிய சேன்ஸலர்
இந்தியரான தன் மனைவி பிரித்தானியாவில் வரி செலுத்துவது தொடர்பில் எழுந்த பிரச்சினையால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிரித்தானிய சேன்ஸலரான ரிஷி சுனக், ராஜினாமா செய்துவிடலாமா என எண்ணும் அளவுக்கு அழுத்தத்திற்கு ஆளானதாக the Sunday Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளாவார். அந்த நிறுவனத்தின் 0.9 சதவிகித பங்குகளை அவர் தன் வசம் வைத்துள்ளார். அந்த பங்குகளால் அவருக்கு கடந்த ஆண்டு 11.6 மில்லியன் பவுண்டுகள் வருவாய் வந்துள்ளது.
ஆனால், அக்ஷதா, அந்த வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை. அவர் வரி செலுத்தியிருந்தால் பிரித்தானியாவுக்கு சுமார் 4.4 மில்லியன் பவுண்டுகள் வரி வகையில் வருவாய் வந்திருக்கும்.
அக்ஷதாவுக்கு பிரித்தானியாவில் 'non-dom' status என்ற நிலை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 'non-dom' status என்பது, ஒருவர் பிரித்தானியாவில் வாழ்ந்தாலும், அவரது சொந்த நாடு வேறொன்று என்பதால், வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு வரும் வருவாய்க்கு அவர் பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை.
பிரித்தானியாவில் வாழும் செல்வந்தர்கள் பலர், இந்த 'non-dom' status என்ற நிலையைப் பயன்படுத்தி பெருந்தொகை வரி செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், தான் இந்தியக் குடிமகள் என தெரிவித்துள்ள அக்ஷதாவுக்கு 'non-dom' status கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வந்த வருவாய்ப்பு பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை.
அக்ஷதாவுக்கு சட்டப்படிதான் 'non-dom' status என்ற நிலை கொடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவரது கணவரும் பிரித்தானிய சேன்ஸலருமான ரிஷி, பிரித்தானிய மக்கள் பலர் பண வீக்கம் காரணமாக வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், வரிகளை மேலும் உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, மக்களுக்கு வரி உயர்வு, சேன்ஸலரின் மனைவிக்கு வரி விலக்கா என விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், வெளிநாட்டிலிருந்து வரும் வருவாய்க்கு, இனி பிரித்தானியாவில் வரி செலுத்த இருப்பதாக, தற்போது அக்ஷதா தெரிவித்துள்ளார்.