பிரித்தானியா தொடர்பில் பீதியை பரப்பும் எலோன் மஸ்க்: பிரதமர் ஸ்டார்மர் தகுந்த பதிலடி
தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் கலவரங்களால் பிரித்தானியாவில் உள்நாட்டுப் போர் தவிர்க்க முடியாதது என்று எலோன் மஸ்க் கூறியுள்ள கருத்துக்கு பிரதமர் ஸ்டார்மர் தக்க பதிலடி அளித்துள்ளார்.
நியாயப்படுத்த முடியாது
எலோன் மஸ்க் கருத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமர் ஸ்டார்மர் பிரித்தானியாவில் குடியிருக்கும் அனைத்து சமூக மக்களுக்காகவும் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவசர Cobra கூட்டத்தை அடுத்து கலவரக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் ஸ்டார்மர், நீங்கள் வன்முறையைத் தூண்டுகிறீர்கள் என்றால், அது இணையமூடாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலாக இருந்தாலும், கண்டிப்பாக கைது செய்யப்படுவீர்கள், தண்டனை உறுதி என்றார்.
சுமார் ஒரு வார காலமாக நீடித்துவரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 400 பேர்கள் கைதாகியுள்ளனர். சிறப்பு அதிகாரிகள் குழுவை களமிறக்கி, வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

500 பேர்களுக்கு மேல் கைது செய்யப்படலாம் என்றும், சிறையில் அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சமூக ஊடக செயலி ஊடாக ஆதரவாளர்களை திரட்டிவரும் தீவிர வலதுசாரிகள், நாடு முழுவதும் இந்த வாரம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
39 பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்
Southport பகுதியில் கோடைகால முகாம் ஒன்றில் கலந்துகொண்ட சிறுமிகளில் மூவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே, தீவிர வலதுசாரிகளால் நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புதன்கிழமை இன்னொரு போராட்டத்திற்கு தீவிர வலதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுவரை வெளியான தரவுகலின் அடிப்படையில், 39 பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இதனிடையே, முகமூடி அணிந்த சுமார் 700 பேர்கள் கொண்ட வலுவான குழு ஒன்று, புலம்பெயர் மக்கள் தங்கியிருந்த ஹொட்டலை தாக்கியுள்ளனர். இந்த வன்முறையில் 10 பொலிசார் கயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |