கனடாவிலிருந்து எல்லை தாண்டி எரிபொருள் வாங்க அமெரிக்காவுக்கு சென்ற பெண் சந்தித்த எதிர்பாராத அதிர்ச்சி
கனடாவில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வாழ்பவர்கள், எல்லை தாண்டி அமெரிக்காவுக்குச் சென்று எரிவாயு முதலான அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வகையில், கனடா அவர்களுக்கு விதிவிலக்கு ஒன்றிற்கு அனுமதி அளித்துள்ளது.
செய்திகள் மூலம் அதை அறிந்த Marlane Jones (68) என்ற பெண்மணி, வாஷிங்டனிலுள்ள Blaine என்ற இடத்துக்குச் சென்று எரிபொருள் வாங்கிக்கொண்டு திரும்பியிருக்கிறார்.
அப்போது, அவரை தடுத்து நிறுத்திய கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இல்லாததால், அவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக அவரைக் கடிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த விதிமுறை மாறிவிட்டதாக அதிகாரி ஒருவரிடம் கூறியிருக்கிறார் Marlane. அந்த அதிகாரியோ அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
ஒன்றில், 5,700 டொலர்கள் அபராதம் செலுத்துமாறும் அல்லது அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்று வாஷிங்டன் மாகாணத்தில் பிசிஆர் பரிசோதனை செய்து 72 மணி நேரம் காத்திருந்து பரிசோதனை முடிவுகளை கொண்டுவருமாறும் அவர்கள் Marlaneஇடம் உறுதியாகக் கூறிவிட, திகைத்து, அதிர்ச்சியில் கண்ணீர் விட்டிருக்கிறார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை, அவசரகால ஆயத்தங்களுக்கான (Minister of Emergency Preparedness) அமைச்சரான Bill Blair, தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சாலைகளும் ரயில் பாதைகளும் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்காக பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் அமெரிக்காவுக்கு எல்லை தாண்டி செல்வதற்கான விதிவிலக்கை அறிவித்தார்.
விடயம் என்னவென்றால், எல்லை அதிகாரிகளுக்கு இந்த விதிவிலக்கு குறித்து தெரிந்திருக்கவில்லை.
தற்போது Marlane பாதிக்கப்பட்ட விடயம் வெளிவந்துள்ள நிலையில், இந்த விதிவிலக்கு தொடர்பாக சில குழப்பங்கள் இருப்பதை Bill Blair ஒப்புக்கொண்டுள்ளார்.
திடீர் அபராதத்தால் அதிர்ச்சிக்குள்ளான Marlaneஓ, தான் செலுத்திய அபராதத்தொகையை திரும்பப் பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படுமென தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் அவர்.