கொழுந்துவிட்டெரியும் கனேடிய மாகாணம்... ட்ரோன்கள் பறக்கவிடும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் காட்டுத்தீயால் சூழப்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில், ட்ரோன்களை பறக்கவிட்டு, காட்சிகளை படம் பிடிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயினால் அச்சுறுத்தல்
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீயினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
@reuters
வேகமாக பரவிவரும் காட்டுத்தீயை படம்பிடிக்கும் நோக்கில் ட்ரோன்களை பறக்கவிடும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பொறுப்புடன் செயல்படவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போது அவற்றைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் போதுமான அளவு வலியுறுத்த முடியாது என அமைச்சர் போவின் மா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுமார் 30,000 பேர் வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் உள்ளனர், அத்துடன் 36,000 பேர் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர் என்று போவின் மா கூறியுள்ளார்.
சட்டவிரோதமானது என அமைச்சர்
இதனிடையே, காட்டுத்தீயை படம் பிடிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்கள் அவசரகால குழுக்களை பாதுகாப்பாக செயல்பட அனுமதிக்கும் வகையில் விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
@getty
காட்டுத் தீயின் புகைப்படங்களை எடுக்க முயற்சிப்பது என்பது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, ட்ரோன்களை காட்டுத்தீ பகுதிகளில் பறக்க அனுமதிப்பதும் சட்டவிரோதமானது என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 3,400 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில் இந்தமுறை 14 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |