பிரெஞ்சுத் தீவில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞர்: துப்புக் கொடுத்தால் பெருந்தொகை அளிக்க முன்வந்துள்ள பெற்றோர்
பிரித்தானிய இளைஞர் ஒருவர் பிரெஞ்சுத் தீவு ஒன்றில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும், குற்றவாளிகள் யாருக்கும் தண்டனை கிடைக்காத நிலையில், தங்கள் மகனுடைய கொலை குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு பெரும்தொகை ஒன்றை பரிசாக அளிக்க இருப்பதாக அந்த இளைஞரின் பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
2011ஆம் ஆண்டு, பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவில் முன்னாள் கடற்படை வீரரான Carl Davies (33) என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, அவரது உடல், அடித்து நொறுக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நீரோடை ஒன்றின் அருகே வீசப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 2017ஆம் ஆண்டு, Vincent Madoure என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. அத்துடன், Vincentம் விரைவில் விடுவிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு, போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கிலிருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டார்.
தங்கள் மகனுடைய மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என Carlஉடைய பெற்றோர் போராடி வந்த நிலையில், வழக்கில் தொடர்புடையவர்கள் கொடூர கேங் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தீவே அவர்களைக் கண்டு பயப்பட்டதால், அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை.
நவம்பர் மாதம் 8ஆம் திகதி வந்தால், Carl இறந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் தன் மகனுக்கு நீதி கிடைக்கவேண்டும் என போராடி வரும் Carlஇன் தாய் Maria Davies, தன் மகனுடைய கொலை குறித்து யாராவது தகவல் கொடுத்தால், அவர்களுக்கு 10,000 பவுண்டுகள் பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தன் மகன் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. இப்போதாவது யாராவது சாட்சியமளிக்க முன்வரலாம் என நம்புவதாக தெரிவிக்கும் அவர், தாங்கள் உண்மையை அறிய விரும்புவதாகவும், தங்கள் மகனுக்காக துக்கம் அனுஷ்டிக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.