பிரான்ஸில் பிரித்தானிய குடும்பத்தின் மீது துப்பாக்கி சூடு: 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டில் 11 வயது சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதுடன் அவருடைய பிரித்தானிய பெற்றோரும் படுகாயமடைந்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட 11வயது சிறுமி
பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பிரித்தானிய குடும்பத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் செயின்ட்-ஹெர்போட் பகுதியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் சனிக்கிழமை 10 மணி அளவில் நடத்தப்பட்ட அத்துமீறிய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 வயது சிறுமி பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பிரான்ஸ் 3 தகவலின் அடிப்படையில், 11 வயது சிறுமியின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தாய் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் தப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் 11 வயது சிறுமியின் 8 வயது சகோதரி, துப்பாக்கி சூடு சம்பவத்தின் இந்த அதிர்ச்சியான நேரத்தில் எந்தவொரு காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார்.
உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்த தகவலில், 8 வயது சிறுமி அண்டை வீட்டாரின் வீடுகளுக்கு ஓடிச் சென்று தன்னுடைய சகோதரி இறந்து விட்டதாக கத்தி கூச்சலிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அண்டை வீட்டார்
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 71 வயதான அண்டை வீட்டுக்காரர் மற்றும் அவரது மனைவியை பொலிஸார் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர்.
file pic/Sky news
உள்ளூர் வழக்கறிஞர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஓய்வூதியம் பெறும் நபர் திடீரென ஆயுதத்துடன் புகுந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணை சான்றுகள் தெரிவிக்கின்றன என தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இருவீட்டார் இடையிலும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.