பிரான்ஸ் ஏரியில் பிரம்மாண்ட தங்கமீனை பிடித்த பிரித்தானிய மீனவர்!
பிரான்ஸ் ஏரி ஒன்றில் பிரித்தானிய மீனவர் ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய தங்கமீனை பிடித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தங்கமீன்
தி கேரட் (The Carrot) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட பிரம்மாண்டமான தங்கமீனின் எடை 30.5 கிலோகிராம் (67 பவுண்ட் 4 அவுன்ஸ்) ஆகும். இது 2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டாவில் ஜேசன் ஃபுகேட்டால் பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தங்கமீனாகக் கருதப்பட்ட மீனை விட 13.6 கிலோ எடை அதிகம்.
எனவே இது இப்போது உலகின் மிகப்பெரிய தங்கமீன் என்ற புதிய உலக சாதனையை படைக்கலாம் என கூறப்படுகிறது.
Facebook @Bluewater Lakes
பிரித்தானிய மீனவர்
பிரித்தானியாவைச் சேர்ந்த 42 வயதான Andy Hackett என்பவர், உலகின் தலைசிறந்த கெண்டை மீன் வளர்ப்பில் ஒன்றான பிரான்சின் ஷாம்பெயின் நகரில் உள்ள புளூவாட்டர் ஏரிகளில் (Bluewater Lake) மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த தங்கமீனை பிடித்துள்ளார்.
இந்த மீன், பாரம்பரியமாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் தோல் கெண்டை மற்றும் கோய் கெண்டை மீனின் கலப்பினமாகும்.
அதிர்ஷ்டம்
இவ்வளவு பெரிய தங்கமீன் (கேரட்) உள்ளே இருப்பதை முன்பே எப்போதும் அறிந்திருந்ததாகவும், ஆனால் அதைப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் Andy கூறினார்.
இந்த பிரமாண்ட தங்கமீனை துரத்திப் பிடிக்க அவர் 25 நிமிடங்கள் எடுத்தார். தனது தூண்டிலில் சிக்கியதும் அது ஒரு பெரிய மீன் என்று தெரிந்துகொண்ட அவர், அதைப் பிடித்தது முற்றிலும் தனது அதிர்ஷ்டம் தான் என கூறினார்.
இதற்கிடையில், 'கேரட்' புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. புளூவாட்டர் லேக்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம், பிரமாண்டமான மீனை கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கும் Andyயின் மூன்று படங்களைப் பகிர்ந்துள்ளது.